சென்னை: மயிலை கபாலீஸ்வரர் பங்குனி பெருவிழாவையொட்டி தேரோட்டம், 63நாயன்மார்கள் விழா நடைபெறும் 15 மற்றும் 16ந்தேதி மயிலை பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. மேலும், தேவைப்படும் நேரங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பபடும் என சென்னை போக்குவரத்து காவல்துறை அறிவித்து உள்ளது.
இதுதொடர்பாக போக்குவரத்து போலீசார் வெளியிட்டுள்ள அறிக்கையில், மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் பங்குனி பெருவிழா கடந்த 9ம் தேதி தொடங்கி, வரும் 18ம் தேதி வரை நடைபெறுகிறது. இதை முன்னிட்டு, பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் வசதியை கருத்தில் கொண்டு தேவைப்படும் நேரங்களில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்படும்.
நாளை (15ம் தேதி) தேர் திருவிழா நடைபெறுவதால், அன்று காலை 5 மணி முதல் நிகழ்ச்சி முடிவடையும் வரையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படும்.
நாளை மறுதினம் (16ம் தேதி) அறுபத்து மூவர் திருவிழா நடைபெறுவதால், அன்று அதிகாலை 2 மணி முதல் நிகழ்ச்சி முடிவடையும் வரையிலும் கீழ்கண்டவாறு போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்படும்.
கபாலீஸ்வரர் கோயிலை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து கோயிலை நோக்கி வாகனங்கள் அனுமதிக்கப்பட மாட்டாது. குறிப்பாக, லஸ் சந்திப்பிலிருந்து ஆர்.கே. மடம் சாலை, புனிதமேரி சாலையிலிருந்து-ஆர்.கே.மடம் சாலையில் தெற்கு மாட வீதி நோக்கி, கச்சேரி சாலையிலிருந்து மத்தள நாராயணன் தெரு மற்றும் சிபி கோயில் தெரு, மாங்கொல்லை தெரு, நடுத்தெரு மற்றும் சுந்தரேஸ்வரர் தெரு-கிழக்கு மாடவீதி, கிழக்கு சித்ரகுளம் தெருவிலிருந்து வடக்கு சித்ரகுளம் தெரு,மேற்கு சித்திரகுளம் தெரு, டிஎஸ்வி கோயில் தெரு மற்றும் ஆதாம் தெரு-தெற்கு மாட வீதி. டாக்டர் ரங்கா சாலையிலிருந்து – வெங்கடேச அக்ரகாரம் சாலையில் வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட மாட்டாது.
போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்ட சாலைகள்:
லஸ் சந்திப்பை அடை ந்து அடையாறு மற்றும் மந்தைவெளியை நோக்கி செல்லும் அனைத்து வாகனங்களும் லஸ் சர்ச் ரோடு, லஸ் அவென்யூ, லஸ் அவென்யூ ரோடு, கிழக்கு அபிராமபுரம் முதல் தெரு, டாக்டர் ரங்கா ரோடு, வாரண் ரோடு, செயின்ட் மேரிஸ் ரோடு, ஆர்.கே.மடம் ரோடு மற்றும் மந்தவெளியை அடைந்து செல்ல வேண்டிய இலக்கை அடையலாம்.
மந்தைவெளி சந்திப்பை நோக்கி வந்து மந்தைவெளி அடைந்து பாரிமுனை நோக்கி செல்லும் அனைத்து வாகனங்களும் வி.கே.அய்யர் ரோடு, சிரிங்கேரி மடம் ரோடு, செயின்ட் மேரிஸ் ரோடு, வாரண் ரோடு, டாக்டர் ரங்கா ரோடு, பக்தவச்சலம் ரோடு, டி செல்வா ரோடு, லஸ் சர்ச் ரோடு, ஆளிவர் ரோடு யூ திருப்பம், முசிரி சுப்பிரமணியம் சாலை மற்றும் பி.எஸ்.சிவசாமி சாலை வழியாக செல்ல வேண்டிய இலக்கை அடையலாம்.
கச்சேரி சாலையில் போக்குவரத்து நெரிசல் அதிகமாகும் பட்சத்தில் சாந்தோம் சந்திப்பிலிருந்து கச்சேரி சாலை வழியாக லஸ் சந்திப்பை நோக்கி வரும் மாநகர பேருந்துகள் சாந்தோம் சந்திப்பில் திருப்பப்பட்டு காந்தி சிலையை அடைந்து ஆர்.கே.சாலை, வி.எம் சாலை மற்றும் ராயப்பேட்டை நெடுஞ்சாலை வழியாக லஸ் சந்திப்பை அடையலாம்.
தேவைப்படும் பட்சத்தில் ராயப்பேட்டை நெடுஞ்சாலையில் பி.எஸ்.சிவசாமி சாலையிலிருந்து லஸ் சந்திப்பு வரை ஒரு வழி சாலையாக போக்குவரத்து அமல்படுத்தப்படும்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.