நேபிதா: மியான்மரில் மீண்டும் ஓராண்டு அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதால், அசாதாரண சூழல் எழுந்துள்ளது.

மியான்மரில் 2020ம் ஆண்டு நவம்பரில் நடைபெற்ற தேர்தலில், தேசிய ஜனநாயக லீக் கட்சி வெற்றி பெற்றது. ஆனால், அதில் முறைகேடு குற்றச்சாட்டு கூறிய ராணுவம், அதிபர் மற்றும் தேர்தல் அதிகாரிகளுக்கு  எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

ராணுவத்தின் புகாருக்கு தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்திருந்த நிலையில், அதிபர் வின் மைன்ட், ஆளுங்கட்சியின் முக்கியத் தலைவர் ஆங் சான் சூகி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதே நேரத்தில் இன்று நாடாளுமன்றம் கூட இருந்த நிலையில் ராணுவம் அதிரடியாக அந்நாட்டில் அவசர நிலையை பிரகடனப்படுத்தி உள்ளது. மியான்மரில் ஓராண்டுக்கு அவசர நிலை நீடிக்கும் என அந்நாட்டு ராணுவம் அறிவித்துள்ளது.

தலைநகர் நேபிதா மற்றும் முக்கிய நகரான யாங்கூனின் வீதிகளில் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். பல்வேறு முக்கிய நகரங்களில் தொலைத் தொடர்பு சேவை துண்டிக்கப்பட்டுள்ளது. அந்நாட்டில் கடந்த 10 ஆண்டுகளில் பல்வேறு அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. அதனை சுருக்கமாக பார்க்கலாம்.

2010, நவம்பர் 9:  தேர்தலில் ராணுவம் ஆதரவு பெற்ற ஐக்கிய ஒற்றுமை மற்றும் மேம்பாட்டு கட்சி வெற்றி பெற்றது. ஆங் சாங் சூகியின் தேசிய ஜனநாயக கட்சி தேர்தலை புறக்கணித்தது.

2010, நவம்பர் 13: 7 ஆண்டுகள் வீட்டுக் காவலில் இருந்த ஆங் சாங் சூகி விடுதலை செய்யப்பட்டார்.

2011, ஜனவரி 31: 1962ம் ஆண்டுக்கு அந்நாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்றமானது கூடியது.

2015, நவம்பர் 8: 1990ம் ஆண்டுக்கு பிறகு, மக்களின் ஆதரவால் அந்நாட்டில் ஆங் சாங் சூகியின் தேசிய ஜனநாயக கட்சி வெற்றி பெற்றது.

2020, நவம்பர் 8: பொதுத்தேர்தலில் நாடாளுமன்ற இரு அவைகளில் உள்ள 476 இடங்களில் 396 இடங்களை தேசிய ஜனநாயக கட்சி வென்றது. ஆனால் அப்போது ராணுவத்தின் ஆதரவு பெற்ற ஐக்கிய ஒற்றுமை மற்றும் மேம்பாட்டு கட்சியானது தேர்தலில் முறைகேடு நடந்ததாக குற்றம்சாட்டியது.

2021, ஜனவரி 26: தேர்தல் முறைகேடு குறித்து விரிவான விசாரணை நடத்த வேண்டும் என்று ராணுவம் கோரியது.

2021, ஜனவரி 30: அரசியலமைப்பை காப்பாற்ற போவதாகவும், சட்டத்தின்படி நடக்க போவதாகவும் கூறியது. அதனால் அந்நாட்டில் மீண்டும் ராணுவ ஆட்சி சாத்தியமாகுமோ என்ற சூழல் எழுந்தது.

2021, பிப்ரவரி 1: ஆளும் தேசிய ஜனநாயக கட்சி தலைவர் ஆங் சாங் சூகியையும், அவரது கட்சியின் முக்கிய தலைவர்களையும் அதிரடியாக கைது செய்தது.

2021, பிப்ரவரி 1: அடுத்த சில மணி நேரங்களில் காலை 10.30 மணியளவில் ஓராண்டு அவசர நிலை பிரகடனப்பட்டுள்ளதாகவும், ராணுவ தளபதி மின் ஆங் ஹியாங்கிடம் அதிகாரம் ஒப்படைக்கப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.