நேப்பித்தோ: மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிரான  போராட்டங்களின் போது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டுக்கு பலியானவா்களின் எண்ணிக்கை 500ஐ கடந்துள்ளது.

மியான்மரில் கடந்தாண்டு நவம்பா் மாதம் நடைபெற்ற பொதுத் தோ்தலில் முறைகேடுகள் நடைபெற்றதாக கூறி, மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட அரசை ராணுவம் கடந்த பிப்ரவரி  1ம் தேதி கலைத்தது. அரசின் தலைமை ஆலோசகா் ஆங் சான் சூகி, அதிபா் வின் மியின்ட் உள்ளிட்ட முக்கிய தலைவா்கள் கைது செய்யப்பட்டனா்.

தொடா்ந்து, ஜனநாயக அரசை மீண்டும் அமைக்க வலியுறுத்தியும் கைது செய்யப்பட்ட அரசியல் தலைவா்களை விடுவிக்கக் கோரியும் மியான்மா் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. போராட்டக்காரர்கள் மீது நாள்தோறும் கண்ணீர் புகைக் குண்டுகள் மற்றும் ரப்பர் குண்டு தாக்குதலும் நடத்தப்பட்டு வருகிறது.

இந் நிலையில், மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிரான  போராட்டங்களின் போது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டுக்கு பலியானவா்களின் எண்ணிக்கை 500ஐ கடந்துள்ளது.

போராட்ட வன்முறை குறித்த தகவல்களை சேகரித்து வெளியிட்டு வரும் மியான்மா் அரசியல் கைதிகள் நலச் சங்கம் தெரிவித்ததாவது: ராணுவ ஆட்சிக்கு எதிராக நாடு முழுவதும் நடைபெற்று வரும் போராட்டங்களின் போது, போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டுக்கு பலியானவா்களின் எண்ணிக்கை 510 ஆக உயா்ந்துள்ளது. ஆவணப்படுத்தப்பட்ட  பலிகளை கணக்கிட்டு இந்த விவரம் வெளியிடப்பட்டு உள்ளன என்று கூறி உள்ளது.