டில்லி:

வைகோ என்னுடைய குடும்பத்தில் ஒருவர், எனது  இளையதம்பி என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் வைகோவை சந்தித்தபோது நெகிழ்ச்சியாக கூறினார்.

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை, மதிமுக பொதுச்செயலாளர் வை.கோ. எம்.பி. இன்று சந்தித்து பேசினார். இவர்களின் உரையாடல் சுமார் 30 நிமிடம் வரை நீடித்தது.  தற்போதைய அரசியல் நிலவரம் உள்பட பல்வேறு சம்பவங்கள் குறித்து இருவரும் உரையாடினார்கள்.

அவர்களின் உரையாடலினபோது,  வைகோவை பார்த்து கூறிய  மன்மோகன் சிங்,  மிஸ்டர் வைகோ, எனக்கு 86 வயது ஆகின்றது. நான் உங்களுடைய மூத்த அண்ணன். நீங்கள் என்னுடைய இளையதம்பி என்றவர், நீங்கள்  என் குடும்பத்தில் ஒருவர் நெகிழ்ச்சியாக கூறினார்.

உங்களைப் போன்ற தலைவரைக் காண்பது அரிது என்று தெரிவித்த மன்மோகன் சிங், நேற்று நீங்கள் மாநிலங்கள் அவையில் உரையாற்றியதைப் பார்த்தேன். அருமையாக இருந்தது என்றவர், தாங்கள்  குடும்பத்தோடு என் வீட்டுக்கு விருந்துக்கு வர வேண்டும் என்று வைகோவை கேட்டுக் கொண்டார்.

அதற்கு பதில் அளித்து பேசிய வைகோ, சென்னையில் என்னுடைய புத்தகத்தை வெளியிட்டு நீங்கள் பேசும் போதே  என்னை மிகவும் பாராட்டினீர்கள். அதற்காக நன்றி என்று வைகோ தெரிவித்தார்.