பெங்களூரு:
எம்எல்ஏ-வுடன் பேரம் பேசியதாக வெளியான ஆடியோவில் இருப்பது தன்னுடைய குரல் தான் என பாஜக தலைவர் எடியூரப்பா ஒப்புக்கொண்டுள்ளார்.
கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ்-ஜனதா தளம் (எஸ்) கூட்டணி ஆட்சியின் முதல்வராக குமாரசாமி உள்ளார். பா.ஜனதாவுக்கு 104 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். அத்துடன் 2 சுயேச்சை எம்.எல்.ஏ.க்களின் ஆதரவும் உள்ளது. இன்னும் 7 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இருந்தால் பா.ஜனதா ஆட்சி அமைத்துவிடும்.
காங்கிரசின் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் ரமேஷ் ஜார்கிகோளி, உமேஷ் ஜாதவ், மகேஷ் கமடள்ளி, நாகேந்திரா ஆகியோர் மும்பையில் பா.ஜனதாவின் கட்டுப்பாட்டில் உள்ளதாகக் கூறப்படுகிறது.
காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் கடந்த 8-ந் தேதி பெங்களூருவில் சித்தராமையா தலைமையில் நடைபெற்றது. இதில் அனைத்து எம்.எல்.ஏ.க்களும் கட்டாயம் கலந்துகொள்ள வேண்டும் என்று கொறடா உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
ஆனால் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 4 பேரும் கூட்டத்தை புறக்கணித்தனர். இதையடுத்து அவர்கள் 4 பேரையும் கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் தகுதி நீக்கம் செய்ய சபாநாயகரிடம் மனு கொடுப்பது என்று சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தீர்மானித்துள்ளது.
இந்நிலையில், ஜனதா தளம் (எஸ்) கட்சியை சேர்ந்த நாகன கவுடா எம்.எல்.ஏ.வை இழுக்க அவரது மகன் ஷரண் கவுடாவிடம் கர்நாடக பா.ஜனதா தலைவர் எடியூரப்பா பேரம் பேசிய உரையாடல் ஆடியோவை கடந்த 8-ந் தேதிமுதலமைச்சர் குமாரசாமி வெளியிட்டு குற்றஞ்சாட்டியிருந்தார்.
ஆனால் அந்த உரையாடலில் இருப்பது தனது குரல் இல்லை என்று எடியூரப்பா மறுத்தார்.
அத்துடன், தன் மீதான குற்றச்சாட்டை நிரூபித்தால் அரசியலில் இருந்து ஓய்வுபெறுவதாகவும் எடியூரப்பா அறிவித்திருந்தார். மேலும் பா.ஜனதாவினரும், குமாரசாமி வெளியிட்ட பேர ஆடியோ போலியானது எனவும் கூறி வந்தனர்.
இந்த ஆடியோ விவகாரம் குறித்து விசாரணை நடத்தப்படும் என்று மாநில அரசு அறிவித்துள்ளது. மேலும் ஆடியோவை குரல் பரிசோதனைக்காக அனுப்பவும் உள்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த சம்பவம் கர்நாடக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், பேரம் பேசியதாக குமாரசாமி வெளியிட்ட ஆடியோ பதிவில் இருப்பது தனது குரல்தான் என்று எடியூரப்பா ஒப்புக்கொண்டுள்ளார்.
இதுகுறித்து, உப்பள்ளியில் நேற்று நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், “நான் தங்கியிருந்த இடத்திற்கு என்னிடம் பேச குமாரசாமி, குருமித்கல் தொகுதி ஜனதா தளம் (எஸ்) கட்சி எம்.எல்.ஏ.வின் (நாகன கவுடா) மகனை நள்ளிரவு 12.30 மணிக்கு அனுப்பினார்.
அவர் என்னிடம் வந்து பேசியது உண்மைதான். நாங்கள் பேசிய உரையாடலில் தேர்வு செய்து சில பேச்சுகளை மட்டுமே குமாரசாமி வெளியிட்டுள்ளார். அதில் இருப்பது எனது குரல் தான்.
குமாரசாமி தரம் தாழ்ந்த, மிரட்டல் போக்கு கொண்ட அரசியலை செய்கிறார். அதில் சில உண்மைகளை மூடி மறைத்துவிட்டனர். நாங்கள் உண்மையாகவே என்ன பேசினோம் என்பது பற்றிய விவரங்கள் வரும் நாட்களில் வெளியே வரும்.
சபாநாயகருக்கு பணம் கொடுத்திருக்கிறோம் என்று நான் சொல்லவில்லை. அதை நிரூபித்தால் நான் அரசியலை விட்டு விலக தயாராக இருக்கிறேன். இதுதொடர்பாக எந்த விதமான விசாரணைக்கும் நான் தயார்” என்றார்.
இதற்கிடையே, முன்னாள் முதல்வர் சித்தராமையா கூறும்போது, ” சதி செய்து, இந்த அரசை கவிழ்க்க எடியூரப்பா முயற்சிக்கிறார். இதில் எடியூரப்பாவுக்கு வெற்றி கிடைக்காது. ஆடியோ உரையாடலில் இருப்பது எனது குரல் இல்லை என்று எடியூரப்பா கூறினார்.
இப்போது எனது குரல் தான் என்று அவர் ஒப்புக்கொண்டுள்ளார். அதனால் எடியூரப்பா பதவியை ராஜினாமா செய்துவிட்டு அரசியலில் இருந்து ஓய்வு பெற வேண்டும் ” என்றார்.