சென்னை: தன் தாயார் உருவாக்கிய பள்ளிக்கு அவப்பெயர் ஏற்பட்டு விடக்கூடாது; நடவடிக்கை எடுங்கள் பள்ளி நிர்வாகத்துக்கு ஒய்.ஜி.மகேந்திரன் டிவிட் முலம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கேகே நகரில் உள்ள பிரபல  பத்ம சேஷாத்ரி பால பவன் பள்ளியின் வணிகவியல் ஆசிரியர் மீது அந்தப் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் பாலியல் வன்முறை புகாரை எழுப்பியுள்ளனர். இதுதொடர்பாக அந்தப் பள்ளியின் முன்னாள் மாணவி ஒருவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனக்கு வந்த புகார்களைப் பகிர்ந்ததை அடுத்து குற்றம்சாட்டப்பட்ட ஆசிரியர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும்படி பல்வேறு தரப்பிலிருந்து குரல்கள் வலுத்துவருகின்றன.

பத்ம சேஷாத்ரி பால பவன் பள்ளியின் கே.கே.நகர் கிளையில் வணிகவியல் ஆசிரியராகப் பணியாற்றும் ராஜகோபாலன் என்பவர் மீதுதான் இந்தப் புகார் எழுப்பப்பட்டுள்ளது. இன்ஸ்டாகிராம் இன்ஃபுளுயன்ஸராக இருக்கும் அந்தப் பள்ளியின் முன்னாள் மாணவி க்ருபாளி என்பவர், தனது இன்ஸ்டா ஸ்டோரி பக்கத்தில் தொடர்புடைய அந்த ஆசிரியர் மீதான பாதிக்கப்பட்ட மாணவி ஒருவரின் புகாரைப் பகிர்ந்திருந்தார்.

மேலும், சம்பந்தப்பட்டவர்களை விசாரித்து குற்றம் செய்தவர்கள் மீதும் அதை கண்டுகொள்ளாத பள்ளி நிர்வாகத்தின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இதை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கொண்டு செல்வேன் என்று உறுதி அளிப்பதாகவும் தனது ட்விட்டர் பக்கத்தில் திமுக எம்.பி கனிமொழி அவர்கள் பதிவிட்டுள்ளார். இதோ அந்த பதிவு,

பள்ளி நிர்வாகம் நியாயமான நடவடிக்கை எடுக்கும் என்று பள்ளி நிர்வாகம் பதில் அளித்திருந்தது.

இந்த விவகாரம் தொடர்பாக பள்ளி நிர்வாகியின் மகனான ஒய்.ஜி.மகேந்திரனும், இந்த சம்பவத்தின்மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியிறுத்திபள்ளி நிர்வாக்த்துக்கு டிவிட் பதிவிட்டுள்ளார்.

அதில், ‘சென்னை கே.கே. நகரில் அமைந்துள்ள பிஎஸ்பிபி பள்ளியில் பணியாற்றும் வணிகவியல் ஆசிரியர் ராஜகோபாலன் என்பவர் மாணவிகளிடம் பாலியல் ரீதியாக தவறாக நடந்து கொண்டதாகப் புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து பள்ளி நிர்வாகிகளுக்கு பள்ளியின் முன்னாள் மாணவர்கள் தரப்பிலிருந்து ஆசிரியர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் என்னுடைய கவனத்திற்கு வந்தவுடன் பள்ளி நிர்வாகிகளுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளேன். அதில் மாணவர்கள் பாதிக்காத வகையில், உரிய முறையில் விசாரணை நடத்தி, ஆசிரியர் மீது தவறு இருந்தால் உடனடியாக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளேன்.

தன் தாயார் உருவாக்கிய பள்ளிக்கு எவ்விதமான அவப்பெயரும் ஏற்படாத வகையில் பள்ளி நிர்வாகம் நடந்துகொள்ள வேண்டும் என்றும் அந்தக் கடிதத்தில் வலியுறுத்தியுள்ளேன். மேலும், பள்ளியை நிர்வகிப்பதில் தனக்கோ; தன் மகளுக்கோ எவ்விதமான பங்கும் இல்லை’ என்று தெளிவுபடத் தெரிவித்துள்ளார்.

இச்சூழலில், சென்னை கே.கே. நகர் பிஎஸ்பிபி பள்ளியின் தாளாளர் ஷீலா ராஜேந்திரன், பெற்றோர்களுக்குக் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். இது மாதிரியான புகார்கள் கடந்த காலங்களில் தங்களின் கவனத்திற்கு வரவில்லை என்று அந்த கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்த விவகாரம் குறித்து உரிய முறையில் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அந்தக் கடிதத்தில் அவர் தெரிவித்துள்ளார்.