சென்னை: நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானின் முன்னாள் காதலி விஜயலட்சுமி தற்கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஹரி நாடாரை காப்பாற்ற சீமானும் வரவில்லை, யாரும் வரவில்லை என ஹரி நாடார் மனைவி குமுறியுள்ளார்.
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு ஆதரவாக, நடிகை விஜயலட்சுமியை மிரட்டியதாக ஹரிநாடார் தற்போது கைது செய்யப்பட்டு உள்ளார். இது தொடர்பாக விஜயலட்சுமி கடந்த அதிமுக ஆட்சியின்போது சீமான் மற்றும் ஹரிநாடார் மீது கொடுத்த வழக்கை தற்போது தூசி தட்டிய திருவான்மியூர் போலீசார் ஓராண்டுக்கு பிறகு, தற்போது, மற்றொரு வழக்கில் பெங்களூரு சிறையில் இருந்த ஹரிநாடாரை கைது செய்து சென்னைக்கு அழைத்து வந்துள்ளனர். அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, ஒருநாள் காவல் விசாரணைக்கு எடுத்துள்ளனர்.
நடிகை விஜயலட்சுமிக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக ஹரிநாடாரை 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதற்கிடையில், ஹரிநாடார் இடம்பெற்றிருந்த பனங்காட்டுப் படை கட்சியிலிருந்து அவரை நீக்குவதாக கட்சியின் தலைவர் ராக்கெட் ராஜா அறிவித்துள்ளார். ராக்கெட் ராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில், “கட்சியின் கட்டுப்பாட்டை மீறி, கட்சியின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டதால் ஒழுங்கு நடவடிக்கைக்குழுவின் அறிவுறுத்தல்படி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் அடிப்படை உறுப்பினரிலிருந்து ஹரி நாடார் நீக்கப்படுகிறார்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், நீதிமன்றம் வந்த ஹரிநாடாரை சந்தித்த அவரது மனைவி மஞ்சு. இவர் மலேசியாவை சேர்ந்தவர். தனது கணவர் நாடார் சமுதாயத்திற்காகத்தான் குரல் கொடுத்தார். சீமானுக்காகவும் குரல் கொடுத்தார். தற்போது சிறையில் இருக்கிறார் என்றும், இதுவரை அவரை யாரும் காப்பற்ற முன்வரவில்லை, நாடார் சமுதாயத்தினர் இதை சரி செய்ய வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நெல்லை மாவட்டம் ஆலங்குளம் தொகுதியில் போட்டியிட்டு, 37,724 வாக்குகள் பெற்றவர் ஹரிநாடார். இவரது வாக்குகள் அங்கு போட்டியிட்ட திமுக வேட்பாளர் பூங்கோதையின் வெற்றியை தகர்த்தது. இதனால் திமுக தலைமை ஹரிநாடார் மீது கோபத்தில் இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.