ஆக்கப்பூர்வமான அரசியலே என் நோக்கம்!: வேளச்சேரி சுயேட்சை வேட்பாளர் நடிகர் கிட்டி

Must read

q

நடிகர் கிட்டி என்ற ராஜா கிருஷ்ணமூர்த்திக்கு, இளைஞர்களுக்கு தன்னம்பிக்கையூட்டும் பேச்சாளர், தொழில்  நிறுவனங்களின் ஆலோசகர், சமூக  ஆர்வலர்  என்று பன்முகம் உண்டு.

 அண்ணா ஹசாரேவின் ஊழலுக்கு எதிரான இயக்கத்தில் ஈடுபாட்டுடன் செயல்பட்டவர். தற்போது நேரடி அரசியலுக்கு வந்திருக்கிறார்.  வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் வேளச்சேரி தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிடுகிறார்.

அவரிடம்  பேசினோம்:

திடீரென அரசியல் ஆர்வம் எப்படி?

 திடீரென்று இல்லை..  நீண்ட காலமாகவே அரசியலை கவனித்து வருகிறேன். அன்னாஹசாரே இயக்கத்திலும் தீவிரமாக ஈடுபட்டேன். ஏற்கெனவே கட்சிகள் பல எனக்கு அழைப்பு விடுத்தன. ஆனால் அதை நான் ஏற்கவில்லை.

அழைப்புகளை மறுத்து சுயேட்சையாக போட்டியிடுவது ஏன்?

ஏனென்றால், அரசியல் கட்சிகள் எதிர்மறையான விஷயங்களையும், ஒருவரை மற்றவர்  குறை கூறியும் மட்டுமே பிரச்சாரம் செய்கின்றன. இதனால்  சமுதாயத்துக்கு எந்த வித பயனும் கிடையாது. ஆகவேதான் சுயேட்சையாக போட்டியிடுகிறேன்.

நேர்மறையான, ஆக்கபூர்வமான, மக்களுக்குத் தேவையான விஷயங்களை அடிப்படையாக கொண்டு  எனது பிரச்சாரம் இருக்கிறது. இது தமிழக அரசியலில் நல்லதொரு ஆரம்பமாக இருக்கும்.

உங்கள் நோக்கம் என்ன?

அரசியல் என்பது ஆக்கப்பூர்வமானதாக, மக்களுக்கு நன்மை செய்வதாக இருக்க வேண்டும்.  புதிதாய் நாம், புதிய தமிழகம்,புதிய பாரதம் என்பதே எனது கொள்கை.

திரைப்படத்தில் நடித்ததன் மூலம் மக்களிடையே பிரபலமாகியிருக்கிறீர்கள். இதனாலேயே வாக்கு கிடைத்துவிடுமா?

நிச்சயமாக இல்லை.  நடிகர் என்பது மக்களிடம்  அறிமுகத்தை ஏற்படுத்தி தருமே தவிர, வாக்குகளை கொண்டு வந்து சேர்க்காது.  தவிர நான் நடிகராக மட்டுமின்றி, சமூக சேவராகவும் மக்களிடையே அறிமுகமாகியிருக்கிறேன்.   இளைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் சுமார் ஆயிரம் மேடைகளில் நான் பேசியிருக்கிறேன். இதெல்லாம்தான் எனக்கு  வாக்குகளைத்  தரும்.

வேளச்சேரி தொகுதியில் போட்டியிட  காரணம் என்ன?

வேளச்சேரி சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் பல்வேறு இடங்களில் கடந்த  36  வருடங்களாக வசித்து வருகிறேன். இந்த தொகுதியில் மக்கள் தினசரி சந்திக்கும் பிரச்னைகளை நான் நன்கு அறிவேன்.  ஆகவே வேளச்சேரி தொகுதியில் போட்டியிடுகிறேன்.

வெல்ல முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறதா?

என்னிடம் பண பலம் கிடையாது. ஆனால் நாள்தோறும்  நூற்றுக்கணக்கான மக்களை தேடிச்சென்று சந்திக்கக்கும்  வகையில் உடல் பலம் இருக்கிறது. நாள்தோறும்  குறைந்தது 800 பேரை நானே தனியாக சென்று சந்தித்து, வாக்கு கேட்கிறேன். அவர்களிடம், எனது கருத்துக்களைச் சொல்கிறேன். இதன் மூலமே வெற்றியை பெற முடியும் என்று நம்புகிறேன்.

உங்களது பிரச்சாரத்தில் என்ன சொல்கிறீர்கள்?

தொகுதி மக்களின் அடிப்படை பிரச்சினைகளை தீர்ப்பேன் என்று உறுதி அளிக்கிறேன். மேலும் மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் வகையில் செயல்படுவேன் என்பதையும் சொல்கிறேன். குடிநீர் பிரச்னை, மின்வெட்டு, போன்ற பிரச்னைகளுக்கு நிரந்தர முற்றுப்புள்ளி வைக்க நிபுணர்கள் குழு அமைத்து, அவர்கள் தயாரித்து தரும் திட்டத்தின் மூலம் தீர்வு காண்பேன் என்பதையும் சொல்கிறேன்.

More articles

Latest article