கோவை:
ஒட்டுமொத்தமாக தமிழகத்தை பாதுகாப்பதே என் முதல் பணி என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்து உள்ளார்.
கோவையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து, கோவை, திருப்பூர், நீலகிரி, சேலம், நீலகிரி மாவட்ட கலெக்டர்களுடன் ஆலோசனை நடத்திய பின்னர் முதல்வர் ஸ்டாலின் நிருபர்களிடம் கூறியதாவது: கோவை இஎஸ்ஐ மருத்துவமனையை பார்வையிட்டேன். பிபிஇ கிட் கவச உடை அணிந்து சிகிச்சை பெறும் நோயாளிகளை நேரடியாக பார்த்தேன். டாக்டர்கள், நர்சுகளுடன் ஆலோசனை நடத்தினேன்.
கவச உடை அணிவது எவ்வளவு கஷ்டம் என்பது அனைவருக்கும் தெரியும். அந்த உடை அணிந்து டாக்டர்கள், நர்சுகள் வேலை பார்ப்பது பாராட்டதக்கது. அவர்களுக்கு நம்பிக்கை, உற்சாகத்தை ஊட்ட வேண்டும் என்பதற்காக அந்த உடை அணிந்து ஆய்வை மேற்கொண்டேன். தொடர்ந்து, கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு, சேலம் கலெக்டர்கள், அரசு அதிகாரிகளுடன் நானும், சுகாதார அமைச்சர், வனத்துறை, உணவுத்துறை அமைச்சரும் ஆலோசனை நடத்தினோம்
கர்நாடகாவில் 50 ஆயிரம், கேரளாவில் 43 ஆயிரம் என்ற உச்ச நிலையை தொட்டது. தமிழகத்தில் 36 என்ற அளவில் கட்டுக்குள் வைக்கப்பட்டது. 20ம் தேதி கோவை, ஈரோடு மாவட்டங்களில் ஆய்வு செய்து விட்டு கொரோனா தடுப்பு பணிகளை முடுக்கி விட்டேன்
தளர்வுகளற்ற ஊரடங்கு காரணமாக தொற்று குறைந்துள்ளது. சென்னையில் நன்றாக குறைந்துள்ளது. மற்ற மாவட்டங்களில் படிப்படியாக குறைந்துள்ளது. கோவிட் தொற்றில் சென்னையை கோவை தாண்டிய நிலை இருந்தது. அரசின் நடவடிக்கையால், கடந்த 2 நாட்களாக கோவையில் சற்று குறைந்துள்ளது.
கேரளா, கர்நாடகாவில்இருந்து அதிகம் பேர் வருகின்றனர். வட மாநிலங்களில் இருந்து அதிகம் பேர் பணியாற்றுகின்றனர். பல பேர் சேர்ந்து பணியாற்றுகின்றனர். தொழில் நிறுவனங்கள் அதிகம் போன்ற காரணங்களினால் கோவையில் தொற்று அதிகம். எந்த காரணமாக இருந்தாலும்,தொற்றை கட்டுப்படுத்துவதே அரசின் முக்கிய பணி
தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களில் கட்டளை மையம் அமைக்கப்பட்டு உள்ளது. கோவையிலும் அமைக்கப்பட்டு உள்ளது. சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆலோசனை வழங்க 4 ஆலோசனை குழு அமைக்கப்பட்டுள்ளது. கிராமங்களில் பரவலை தடுக்க குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஊரடங்கை கண்காணிக்க பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் படுக்கைகள் அதிகப்படுத்தப்படுகிறது. சிகிச்சை மையங்கள், தற்காலிகமாக பல்வேறு இடங்களில் உருவாக்கப்பட்டு உள்ளது.
கோவை புறக்கணிக்கப்படுவதாக சிலர் கூறுகின்றனர். இதற்கு, நான் அரசியல் ரீதியாக கருத்து கூறவிரும்பவில்லை. நாங்கள் உருவாக்கி வைத்த கட்டமைப்பை பார்த்தால், அவர்கள் புறக்கணிப்பதாக கூற மாட்டார்கள். சென்னைக்கு அடுத்து கோவையில் அதிகளவு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. எல்லா ஊர்களும் எங்கள் ஊர்கள் தான். அதில் பாரபட்சம் ஏதும் இல்லை. எந்த பாரபட்சமும் காட்ட மாட்டோம். 10 ம் தேதி முதல் பரிசோதனை அதிகரிக்கப்பட்டுள்ளது
தமிழகத்தில் எந்த மாவட்டத்திலும் ஆக்ஸிஜன், படுக்கை தட்டுப்பாடு இல்லை. ஒரு நாளில் 3 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்படுகிறது. 1.07 லட்சம் பேருக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்யப்படுகிறது. அதிகளவு ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைள் உருவாக்கி உள்ளோம். இன்னும் கூடுதல் வசதிகளை உருவாக்கி வருகிறோம். பொது மக்கள் முழு ஊரடங்கை கட்டுப்பாடுகளை கடைபிடிக்க வேண்டும் என்பது எனது வேண்டுகோள்
சுகாதார அமைச்சர் மா.சுப்ரமணியன் அடிக்கடி கோவை வந்து ஆய்வு நடத்துகிறார். கடந்த 2 நாட்களாக இங்கு ஆய்வு நடத்தி வருகிறார். தடுப்பு மருந்து உற்பத்தி ஆலை தொடர்பாக மத்திய அரசுக்கு எழுதிய கடிதத்திற்கு இன்னும் கடிதம் வரவில்லை. ஒன்று மத்திய அரசு அந்த ஆலையை ஏற்று நடத்த வேண்டும். அல்லது மாநிலத்திற்கு வழங்க வேண்டும். தமிழகத்தில் அடுத்தடுத்த அலைகளை சந்திக்க தமிழக அரசு தயாராக உள்ளது.
தேர்தலில் ஓட்டுப்போடாத மக்களுக்கும் சேர்த்து பணியாற்றுவோம். கோவையை திமுக அரசு புறக்கணிக்கவில்லை. கோவைக்கு இப்போது மட்டுமல்ல 2 நாளுக்கு பிறகு கூட வருவேன் எப்போது வேண்டுமானாலும் வருவேன். தமிழகத்தை பாதுகாப்பது தான் முதல் வேலை. இவ்வாறு அவர் கூறினார்.