சென்னை : சென்னையில் இன்றுமுதல் புறநகர் மின்சார ரயில் போக்குவரத்து அதிகரிக்கப்பட்டு இருப்தாக தெற்கு ரயிவ்வே அறிவித்து உள்ளது. இன்று முதல் கூடுதலாக, 208 சர்வீஸ்கள் இயக்கப்படுகின்றன. ஆனால்,இதில் பயணம் செய்ய அத்தியாவசிய பணியாளர்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

சென்னை ரயில்வே கோட்டத்தில், கொரோனா தொற்று பரவல் அதிகரிக்காமல் தடுக்க, முன்னெச்சரிக்கையாக, 25ம் தேதியில் இருந்து, ரயில் போக்குவரத்து குறைக்கப்பட்டு, திங்கள் முதல் வெள்ளி வரை, 151 ரயில்களும், ஞாயிற்றுக்கிழமைகளில், 90 ரயில்கள் மட்டுமே இயக்கப்படுகின்றன. பொது பயணியருக்கு அனுமதி கிடையாது.’ரயில்கள் குறைக்கப்பட்டதால் காலை, மாலை நேரங்களில், பயணியர் கூட்டம் அதிகம் உள்ளது. சமூக இடைவெளி பின்பற்றுவதில் சிரமம் உள்ளது. கூடுதல் ரயில்கள் இயக்க வேண்டும்’ என, மத்திய – மாநில அரசு ஊழியர்கள் மற்றும் அத்தியாவசிய பணியாளர்களால் வலியுறுத்தப்பட்டு வந்தது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘அத்தியாவசிய பணிகளில் ஈடுபடுவோர் பணிக்கு சென்று வருகின்றனர். இவ்வாறு செல்லும் போது ஏற்படும் கூட்ட நெரிசலை குறைக்கும் வகையில் சிறப்பு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த ரயில் இன்று முதல் (31ம் தேதி) புதிய அட்டவணைப்படி இயக்கப்படுகிறது. இதையொட்டி, இன்று முதல் (31ந்தேதி)  வெள்ளி வரை, 208 புறநகர் ரயில்கள் இயக்கப்படும் என, சென்னை ரயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது.

அதன்படி மூர் மார்க்கெட்-ஆவடி/திருவள்ளூர்/அரக்கோணம்/திருத்தணிக்கு 42 சர்வீஸ்,

திருத்தணி/அரக்கோணம்/திருவள்ளூர்/ஆவடி-மூர் மார்க்கெட்டுக்கு 44 சர்வீஸ்,

மூர் மார்க்கெட்-கும்மிடிப்பூண்டி/சூளூர்பேட்டைக்கு 16 சர்வீஸ்,

சூளூர்பேட்டை/கும்மிடிப்பூண்டி-மூர் மார்க்கெட்டுக்கு 16 சர்வீஸ்,

சென்னை கடற்கரை-வேளச்சேரிக்கு 12 சர்வீஸ், வேளச்சேரி-சென்னை கடற்கரைக்கு 12 சர்வீஸ்,

சென்னை கடற்கரை-தாம்பரம்/செங்கல்பட்டு/திருமால்பூருக்கு 33 சர்வீஸ்,

திருமால்பூர்/செங்கல்பட்டு/தாம்பர்-சென்னை கடற்கரைக்கு 33 சர்வீஸ் என மொத்தம் 208 சர்வீஸ் திங்கள் முதல் சனி வரை இயக்கப்படும்.

ஞாயிறு இயக்கத்தில் எந்த மாற்றமும் இல்லை’

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.