காட்பாடி: திமுகவினர் உள்ளடி வேலை செய்தும் இறைவன் அருளால் நான் வெற்றி பெற்று விட்டேன் என்று  திமுக மூத்த அமைச்சரும்,  பொதுச்செயலாளருமான  துரைமுருகன் நிர்வாகிகள் கூட்டத்தில் பேசினார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சட்டமன்ற தேர்தலுக்கு முன் திமுக அணி 200 இடங்களுக்கும் மேல் பிடிக்கும் என்று எதிர்பார்க்க நிலையில், 125 இடங்களே கிடைத்தது. பல இடங்களில் திமுகவினர் உள்ளடி வேலை பார்த்து கட்சி வேட்பாளர்களை தோற்கடிக்க வைத்ததாகவும், சிலர் தேர்தல் வேலையே செய்யவில்லை என்றும் பல வேட்பாளர்கள் திமுக தலைமையிடம் புகார் அளித்திருந்தனர். இது தொடர்பாக திமுக தலைமை விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகின.

இந்த நிலையில்,   தேர்தல் நடத்தப்படாத உள்ளாட்சி பகுதிகள் மற்றும் நகராட்சிகளுக்கு இன்னும் ஒருசில மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை முடுக்கி உள்ளன. திமுக சார்பில் தொகுதிவாரியாக திமுக உறுப்பினர்கள் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அதுபோல, வேலூர் மாவட்டம் பொன்னையில்,  காட்பாடி சட்டசபை தொகுதி வடக்கு ஒன்றிய தி.மு.க. உறுப்பினர்கள் கூட்டம்  நடைபெற்றது.  இந்த கூட்டத்தில் அந்த தொகுதி எம்.எல்ஏவும், அமைச்சருமான துரைமுருகன் கலந்துகொண்டு பேசினார். அவர் கூறியதாவது,

காட்பாடி தொகுதியில் நான்  71-ம் ஆண்டு முதல் போட்டியிட்டு மகத்தான ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்று வருகிறேன். இந்த பகுதியில் உள்ள பல பகுதிகள் திமுகவின் கோட்டை. குறிப்பிட்டு சொல்ல வேண்டுமானால், மேல்பாடி, பொன்னை பிர்கா தி.மு.கவின் கோட்டை. ஆனால் நடைபெற்று முடிந்த தேர்தலில், நான்  6 ஆயிரம் ஓட்டுகள் பின்தங்கி விட்டேன். ரும்பாலான பூத்களில் ஓட்டு எண்ணும்போது நான்  பின் தங்கிதான் இருந்தேன்.

என்ன தோற்கடிக்க வேண்டும என சில  தி.மு.க. நிர்வாகிகளே எனக்கு உள்ளடி வேலைகள் செய்தார்கள். அது யார் யார் என்பது எனக்கு தெரியும்.  அவர்களின் பட்டியல் என்னிடம் உள்ளது. அவர்கள்  என்னை தோற்கடிக்க வேண்டும் என நினைத்தார்கள். ஆனால் இறைவன் அருளால் நான் வெற்றி பெற்று விட்டேன். இப்போது அவர்களுக்கும் நான்தான் அமைச்சர்.

காட்பாடி யூனியன் என்னை கைவிட்டது என்ற மெத்த வருத்தம் எனக்கு உள்ளது. ஆனாலும் காட்பாடி தாராபடவேட்டிலிருந்து விருதம்பட்டு வரைக்கும் உள்ள நகராட்சி மற்றும் மாநகராட்சி ஓட்டுகள், ஒருவழியாக உருட்டிபெறட்டி கடைசியில் தபால் ஓட்டுகளில் தான் நாம் வெற்றி பெற்றோம் என சொல்லலாம்.

மறப்போம்.. மன்னிப்போம்.. என அண்ணாதுரை சொன்னதை நினைத்து வரும் உள்ளாட்சி தேர்தலில் நிர்வாகிகள் இரட்டிப்பாக வேலை செய்ய வேண்டும். தி.மு.க. அதிக எண்ணிக்கையில் வெற்றி பெறாவிட்டால் துரோகம் செய்தவர்கள் யாராக இருந்தாலும் பாராபட்சமின்றி அடியோடு தி.மு.க.வில் இருந்து அவர்களை உடனடியாக நீக்கிவிடுவேன்.

தேர்தலின்போது, “நான் சொன்ன வாக்குறுதிகளான பொன்னையில் அரசு கலைக்கல்லூரி மற்றும் பொன்னை ஆற்று மேம்பாலம் கண்டிப்பாக கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்’’.

இவ்வாறு அவர் பேசினார்.

அமைச்சரின் ஓப்பன் டாக் கட்சி நிர்வாகிகளிடையே சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.