கோவை: இந்தியாவில் விரைவில் ஒரு புயல் வீசப்போகிறது; மோடி ஆட்சியிலிருந்து தூக்கி எறியப்படுவார் என கோவையில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவரும் வயநாடு எம்.பியுமான ராகுல் காந்தி ஆவேசமாக கூறினார். மேலும், எனது அண்ணன் மு.க.ஸ்டாலின், நான் வேறு யாரையும் அண்ணன் என்று அழைத்தது இல்லை என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

கோவையில் இன்று இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து நடைபெற்ற தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி உள்ளிட்டோர் கலந்துகொண்டு, திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு கோரினர். பின்னர் கோவையில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் ராகுல்காந்தி பேசியதாவது,

 “தமிழர்களின் மொழி, கலாசாரம், வரலாறு ஆகியவவை எனக்கு மிகவும் பிடித்துள்ளது. தமிழ்நாட்டுக்கு வந்தவுடன் எனக்கு உற்சாகம் பிறக்கிறது. இந்தியாவில் இன்று மிகப்பெரிய சித்தாந்த போராட்டம் நடந்து வருகிறது. இந்தியாவில் விரைவில் ஒரு புயல் வீசப்போகிறது. அதன் மூலம் மோடி ஆட்சியில் இருந்து தூக்கி எறியப்படுவார்.

தற்போது நடப்பது மோடியின் அரசு அல்ல. அதானியின் அரசு. மோடி அரசின் அனைத்து நடவடிக்கைகளும் அதானிக்காகவே நடைபெறுகின்றன. விமான நிலையங்கள், துறைமுகங்கள், சுரங்கங்கள், நெடுஞ்சாலைகள் என அனைத்தும் அதானிக்கே தாரைவார்க்கப்படுகின்றன. அதானி, மோடி தொடர்பு குறித்து நாடாளுமன்றத்தில் பேசிய சில வாரங்களிலேயே எனது எம்பி பதவி பறிக்கப்பட்டது. அதானி பற்றி பேசியதால் எம்பி பதவி மட்டுமல்ல, நான் குடியிருந்த வீட்டையும் பறித்துவிட்டார்கள். நான் குடியிருந்த வீடு பறிபோனதால் எனக்கு கவலை இல்லை. ஏனென்றால் கோடிக்கணக்கான மக்களின் மனங்களே எனது வீடு.

பண மதிப்பிழப்பு, ஜிஎஸ்டி மூலம் சிறு, குறு தொழில்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. பல லட்சம் பேர் வேலையிழந்தனர்.

எனது அண்ணன் மு.க.ஸ்டாலின், நான் வேறு யாரையும் அண்ணன் என்று அழைத்தது இல்லை. தேர்தல் பத்திர ஊழல் மற்றும் பாஜகவின் வாஷிங் மெஷின் பற்றி மு.க.ஸ்டாலின் பேசினார். அது எப்படி நடக்கிறது என விளக்குகிறேன்.

முதலில் அரசியலை சுத்தப்படுத்தப் போவதாக மோடி கூறினார். அதற்காக தேர்தல் பத்திரம் என்ற ஒன்றை கொண்டு வந்தார். தேர்தல் பத்திரங்கள் மூலம் எவ்வளவு நிதி தருகிறார்கள் என்ற விவரம் யாருக்கும் தெரியாது. சில வருடங்களுக்கு பிறகு தேர்தல் பத்திரங்களே சட்டவிரோதமானது என உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. தேர்தல் பத்திரங்கள் மூலம் நிதி அளித்தவர்கள் யார் என்பதை உடனே வெளியிட உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. தேர்தல் பத்திரங்கள் மூலம் நிதி அளித்தோரின் விவரங்கள் வெளியே வந்ததால்தான் மோடியின் நூதன மோசடி முகம் அம்பலமானது. தேர்தல் பத்திரங்கள் மூலம் பெற்ற நிதி என்பது மிரட்டி பணம் பறிக்கும் செயல்தான். நாட்டின் மிகப்பெரிய திட்டங்களுக்கு கமிஷனாகவே தேர்தல் பத்திரங்கள் மூலம் பணம் வசூலிக்கப்படு கின்றன.

நாட்டில் உள்ள ஏழை மக்களுக்காக பிரதமர் மோடி எதையும் செய்யவில்லை. நாட்டின் இளைஞர்களில் 83 சதவீதம் பேர் வேலையில்லாமல் திண்டாடுகின்றனர். பொருளாதாரம் நீதியான ஏற்றத்தாழ்வு மிக மோசமானதாக இருக்கிறது. ஆங்கிலேயர் ஆட்சியை விட பொருளாதார ஏற்றத்தாழ்வு இப்போது அதிகமாக உள்ளது. ஒவ்வொரு நாளும் 30 விவசாயிகள் தற்கொலை செய்துகொள்கின்றனர். ஆனால் விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய பிரதமர் மோடி தயாராக இல்லை. விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய மறுக்கும் பிரதமர் பெரும் பணக்காரர்களுக்கு 14 லட்சம் கோடி கடனை தள்ளுபடி செய்துள்ளார்.

இவ்வாறு கூறினார்.