சென்னை

ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழகம் எதிர்கொண்ட முதல் ஞாயிற்றுக் கிழமையான இன்று, ஆட்டிறைச்சியின் விலை 1000 ஐத் தொட்டதால் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஆனால் இறைச்சிக் கடைகளில் கூட்டம் அலைமோதியது.

நேரக் கட்டுப்பாட்டுடன் காய்கறி, மளிகை, இறைச்சி உள்ளிட்ட சில கடைகள் திறந்திருக்க அரசு அனுமதி அளித்துள்ளது. திங்கள் முதல் நேற்றுவரை காய்கறி மற்றும் மளிகைக் கடைகளில் தான் அதிகம் விற்பனையானது. ஆனால் இன்று இறைச்சி மற்றும் மீன் கடைகளில் அதிகக்கூட்டம் காணப்பட்டது.

வாடிக்கையாளர்களிடையே இடைவெளி ஏற்படுத்த வட்டங்கள் வரையப்பட்டிருந்தன.  ஆட்டிறைச்சியின் விலை 950 முதல் 1000 ரூபாய் வரை விற்பனையானது. மக்கள் விலையுயர்வைக் கேட்டு அதிர்ச்சியடைந்த போதும், பெருமளவிலானோர் வாங்கிச் சென்றனர்.

மேலும் கடந்த சில வாரங்களாக கொரோனாத் தொற்றுக்கு பயந்து பெரும்பாலானோர் கோழியிறைச்சியை அறவே தவிர்த்தனர். இதனால் அதன் விலை கிலோ 20, 30 க்கு விற்பனையானது.

கொரோனாவிற்கும் இறைச்சிக்கும் தொடர்பு இல்லையென அரசு உட்பட பலரும் விழிப்புணர்வை ஏற்படுத்தினர். மேலும் ஆட்டிறைச்சியின் விலை ஆயிரத்தை தொட்டதாலும் சிலரின் பார்வை கோழியிறைச்சியின் பக்கம் திரும்பியதெனலாம். அதன் விலை 200 ல் இருந்தது.  மீன்களுக்கும் தட்டுப்பாடு நிலவுவதால் அதன் விலையும் ஏற்றமாய் இருந்தது.

மக்கள் அதிகமாக ஓரிடத்தில் கூடியபோதும், குறிப்பிட்ட  இடைவெளியைப் பின்பற்றியது பாராட்டத்தக்கது.