டில்லி:

டில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக விடுதியில் இன்று மர்மமான முறையில் மரணமடைந்து கிடந்த தமிழக மாணவர் முத்துகிருஷ்ணன் தற்கொலை செய்துகொண்டிருக்க வாய்ப்பில்லை என்று அவரது தந்தை ஜீவானந்தம் கதறுலுடன் தெரிவித்துள்ளார்.

சேலம் மாவட்டம் சாமிநாதபுரத்தைச் சேர்ந்த ஜீவானந்ததத்தின் மகன் முத்துகிருஷ்ணன். இவர், டில்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நவீன வரலாறு துறையில் ஆய்வு படிப்பை மேற்கொண்டு வந்தார்.

இந்தநிலையில் முத்துக்கிருஷ்ணன் விடுதி அறையில் இன்று பிணமாக மீட்கப்பட்டார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக டில்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டது.

இதனிடையே எம்ஃபில் மற்றும் முனைவர் பட்ட படிப்புகளுக்கான சேர்க்கையில் பாரபட்சம் காட்டப்படுவதாக முத்துகிருஷ்ணன், தனது ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டுள்ளது கவனத்தை ஈர்த்துள்ளது.
ரோகித் வெமுலா தற்கொலைக்கு நீதி கிடைக்க போராடிவரும் மாணவர் குழுவில் இணைந்து பல்வேறு போராட்டங்களை முத்துகிருஷ்ணன் முன்னெடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் முத்துகிருஷ்ணனின் தந்தை ஜீவானந்தம், “முத்துகிருஷ்ணன் தற்கொலை செய்துகொண்டிருக்க வாய்ப்பே இல்லை” என்று கதறலுடன் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், “தற்கொலை செய்துகொள்ளும் அளவுக்கு முத்துகிருஷ்ணனுக்கு எந்தவித பிரச்சினையும் இல்லை. நேற்று முன்தினம்கூட எங்களிடம் போனில் பேசினார். தேர்வை நன்றாக எழுதியிருப்பதாக தெரிவித்தார். அடுத்தவாரம் ஊருக்கு வருவதாகவும் தெரிவித்தார்” என்று ஜீவானந்தம் கூறினார்