சென்னை: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள முத்தூட் பின்கார்ப் நிதி நிறுவனத்தில் கொள்ளையடித்தவர்கள் தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் பிடிபட்டனர். தமிழகம் மற்றும் தெலுங்கானா மாநில காவல்துறையினர் இணைந்து எடுத்த நடவடிக்கை காரணமாக 24 மணி நேரத்தில் கொள்ளையர்கள்  கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொள்ளையர்களிடம் இருந்து, 7 கைத் துப்பாக்கிகள், 25 கிலோ தங்கம், 89 சுற்று வெடிகுண்டுகள் கைப்பற்றப்பட்டு  உள்ளதாக கூறப்படுகிறது.

ஜனவரி 22ந்தேதி அன்று கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பாகலூர் சாலையில் முத்தூட் பின்கார்ப் தனியார் நிதி நிறுவனத்தில் அடையாளம் தெரியாத கும்பல்  நுழைந்து துப்பாக்கியை காட்டி அங்கு பணியிலிருந்த நான்கு பேரை கட்டி போட்டனர். பின்னர் அவர்களிடமிருந்து சாவியை பெற்றுக்கொண்டு அலுவலகத்தில் இருந்த 7 கோடியே 40 லட்சம் ரூபாய் மதிப்பிலான 25 ஆயிரத்து 91 கிராம் தங்க நகை, 90 ஆயிரம் ரொக்கப் பணத்தை கொள்ளையடித்தனர்.

பகல் நேரத்தில் ஓசூர் போன்ற ஒரு தொழில் நகரத்தில் முகமூடி கொள்ளையர்கள் அட்டகாசம் நடத்தியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், விரைந்து வந்து விசாரணை நடத்தியதுடன், கைரேகை உள்பட பல்வேறு தயடங்களையும் சேகரித்தனர்.  அங்கு பதிவு செய்யப்பட்டு இருந்த சிசிடிவி கேமரா பதிவான காட்சிகளை ஆய்வு செய்கிறார்கள். அலுவலக ஊழியர்களிடம் ஒவ்வொருவரிடமும் தனித்தனியாக போலீசார் விசாரணை நடத்தினர். தொடர்ந்து கொள்ளையர்களை பிடிக்க 10 பேர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.

ஓசூர் நகரம், கர்நாடகா மற்றும் ஆந்திரா  மாநிலங்களுக்கு நெருக்கமாக அமைந்துள்ள பகுதி என்பதால், இந்த கொள்ளை சம்பவத்தில் வெளி மாநில கொள்ளையர்கள் ஈடுபட்டிருக்கலாம் என கருதி, உடனே பக்கத்து மாநில காவல்துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு உஷார் படுத்தப்பட்டதுடன், வாகன தணிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டது.

இந்த நிலையில், கொள்ளையனின் செல்போன் தமிழகம்- கர்நாடகா எல்லையில் கண்டுபிடிக்கப்பட்டது. இதை போலீஸார் ஆய்வு செய்தனர். அதையடுதது,  இந்த கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட நபர்கள் தெலங்கானா மாநிலத்தில் உள்ள ஐதராபாத்தில் இருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து, ஐதராபாத் காவல்துறைக்கு தகவல் கொடுத்த தமிழக போலீசார் உடனே அங்கு விரைந்தனர். அங்கு கொள்ளையர்களை, ஐதராபாத்  காவல்துறையின உதவியுடன் அதிரடியாக கைது செய்தனர்.

கொள்ளையர்களிடம் இருந்து, 7 கைத் துப்பாக்கிகள், 25 கிலோ தங்கம், 89 நாட்டு வெடிகுண்டுகளை  கைப்பற்றி உள்ளதாக கூறப்படுகிறது. கொள்ளை நடந்து சுமார் 24 மணி நேரத்தில் கொள்ளையர்களை காவல்துறையினர் மடக்கி கைது செய்துள்ள சம்பவம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.