டில்லி:

ஸ்லாமியர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ள முத்தலாக் தடை சட்டம் பாராளுமன்ற மக்களவையில் அதிமுக ஆதரவோடு நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பான விவாதத்தின்போது மக்களவையில், முத்தலாக் மசோதாவுக்கு அதிமுக எம்பி ரவீந்திரநாத் வரவேற்பு தெரிவித்த நிலையில், மாநிலங்களவையில், அதிமுக எம்.பி. அன்வர் ராஜா எதிர்ப்பு தெரிவித்து பேசினார். ஒரே கட்சியை சேர்ந்த எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் இரு அவைகளிலும் வெவ்வேறு கருத்துக்களை பேசியிருப்பது அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

முத்தலாக், தேசிய பாதுகாப்பு சட்டத் திருத்தங்களுக்கு கடந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரின் போது எதிர்ப்புகளை தெரிவித்து வந்த அதிமுக, தற்போதைய தொடரில், மத்தியஅரசு கொண்டு வரும் அனைத்து வகையான சட்ட திருத்தங்களுக்கும் ஆதரவு அளித்து, சலாம் போட்டு வருகிறது.

மாநிலங்களவையில் இந்த சட்டத்தின் மீதான உரையில் அதிமுக எம்.பி. அன்வர் ராஜா அந்த மசோதாவை எதிர்த்து பேசினார். அவர் பேசும்போது,  “இஸ்லாத்தில் மண விலக்கு என்பது எடுத்தேன் கவிழ்த்தேன் என்று நடப்பதில்லை. முத்தலாக் சொல்வதற்கு முன்பு, அதுகுறித்து, பல படிகளைத் தாண்டி, இனிமேல் முடியாது என்ற நிலையை அடைந்தபோதுதான் இந்த முடிவுக்கே வரவேண்டும் என்று சரியத் கூறுகிறது.

முஸ்லிம்கள் பின்பற்றுகிற சரியத் சட்டம் என்பது மனிதனால் எழுதப்பட்டது அல்ல. அவை இறைவனால் அருளப்பட்ட இறைச்சட்டங்கள்.  உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் ஒரே வணக்கமுறையை இத்தனை ஆண்டு காலமாக எந்த மாற்றமும் இல்லாமல் கடைபிடித்து வருகின்றனர் என்றால் நீங்கள் கொண்டு வரும் சட்டத்தால் இந்த சமூகத்தில் என்ன மாற்றத்தை கொண்டுவர முடியும் என்று கூறியவர் எம்.ஜி.ஆர் பாடலை பாடி கருத்தை தெரிவித்தார்.

தவறு எனபது தவறி செய்வது.. தப்பு என்பது தெரிந்து செய்வது.. தவறு செய்தவன் திருந்தி ஆக ணும்.. தப்பு செய்தவன் வருந்தி ஆகனும் என்று எம்ஜிஆர் பாடினார் என்று கூறியவர்,  நீங்கள் வேண்டும் என்றே இதை தெரிந்து செய்வீர்களானால் நீங்கள் வருந்திதான் ஆகனும். இது முஸ்லிம்களின் தனிப்பட்டச் சட்டத்துக்கு எதிரானதாக உள்ளது. இந்த சட்டம் மத நல்லிணக் கத்துக்கும் சமூக ஒருமைப்பாட்டுக்கும் முஸ்லிம்களுக்கும் எதிராக கொண்டுவரப்பட்டுள்ளது.

இந்த சட்டத்தை நீங்கள் முஸ்லிம்களுக்கு எதிராக மட்டும் கொண்டுவரவில்லை இறைவனுக்கு எதிராக கொண்டு வந்துள்ளீர்கள் என்று குற்றம் சாட்டினார்.

ஒரே கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்களில் ஒருவர் மாநிலங்களவையில், முத்தலாக் சட்டத்தை எதிர்த்தும் மற்றொருவர் மக்களவையில் முத்தலாக் சட்டத்தை ஆதரித்தும் பேசியிருப்பது தமிழக அரசியலில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கிடையில், அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பேசும்போது, முத்தலாக் தடை சட்ட மசோதா மூலம் அனைத்து பெண்களும் சம உரிமை பெற வேண்டும் என்பதே இலக்கு என்று கூறியது குறிப்பிடத்தக்கது.