திஸ்பூர்

ஸ்லாமியர்கள் தங்கள் வறுமையை ஒழிக்க குடும்ப கட்டுப்பாட்டை கடைப்பிடிக்க வேண்டும் என அசாம் முதல்வர் பேசியதற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

அசாம் மாநிலத்தில் 3.12 கோடி இஸ்லாமியர்கள் உள்ளனர். இது மாநில மக்கள் தொகையில் 31% ஆகும்.  அசாம் மாநிலத்தில் 126 சட்டப்பேரவை தொகுதியில் 35 தொகுதிகளின் முடிவு இஸ்லாமியர்களிடம் உள்ளது.    இதில் வங்க மொழி பேசும் இஸ்லாமியர்கள் பெருமளவில் உள்ளனர்.  இவர்கள் வங்கதேசத்தில் இருந்து குடியேறிய மக்களாகக் கருதப்படும் நிலைமை இங்கு அதிகமாக உள்ளது.

அசாமில் தற்போது பாஜக முதல்வராக ஹிமந்தா பிஸ்வா சர்மா பதவியில் இருக்கிறார்.   இம்மாநிலத்தில் பாஜக கால் ஊன்றி ஆட்சியைப் பிடித்தது இவரால் மட்டுமே எனப் பலரும் கூறி வருகின்றனர்.    இவர் பதவி ஏற்று ஒரு மாதம் ஆனதால் இவருக்கு விழா எடுக்கப்பட்டது.  அந்த விழாவில் ஹிமந்தா கலந்துக் கொண்டு சிறப்பு உரையாற்றினார்.

ஹிமந்தா தனது உரையில், “இந்த அரசு ஏழை மக்களுக்கு என்றும் ஆதரவான அரசு என்றாலும் மக்கள் தொகை அதிகரிப்பு தற்போது பெரும் பிரச்சினையாக உள்ளது.   இதைக் கட்டுப்படுத்த சிறுபான்மை சமூகத்தின் ஆதரவு அரசுக்கு மிகவும் தேவையாக உள்ளது.

மக்கள் தொகை பெருக்கமே வறுமைக்கும் கல்வி இல்லாமைக்கும் காரணமாக உள்ளன.  எனவே கண்ணியமான குடும்ப கட்டுப்பாடு முறைகளைச் சிறுபான்மையினர் கடைப்பிடிக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.

இது அசாம் மாநில இஸ்லாமிய மக்களிடையே கடும் எதிர்ப்பை உண்டாக்கி இருக்கிறது.  இஸ்லாமிய வழக்கறிஞரான ஹஃபீஸ் ரஷித் சவுத்ரி, “எங்களுக்கும் பெரிய குடும்பத்தினால் ஏற்படும் தாக்கங்கள் பற்றி நன்கு தெரியும்.   எங்களுக்கு யாரும், இது குறித்து உபதேசிக்க வேண்டாம்.   அரசு வங்க மொழி பேசும் இஸ்லாமியர்களுக்கு எந்த வசதியும் அளிக்காமல் அவர்களை விமர்சிக்கிறது.” எனத் தெரிவித்துள்ளார்.

அசாம் மாநில சிறுபான்மை மாணார் சங்க முன்னாள் தலைவர் ரைஜோர் தல், “எங்கள் மக்களிடையே குடும்ப கட்டுப்பாடு குறித்த விழிப்புணர்வை நாக்களே ஆரம்பித்துள்ளோம்.  ஆனால் அசாமில் இஸ்லாமியர்கள் மட்டுமின்றி பல இனத்தவரும் அதிக குழந்தைகள் பெற்றுள்ளனர். ” எனக் கூறி உள்ளார்.

இஸ்லாமியச் சமுதாய சட்டப்பேரவை உறுப்பினர் ரஃபிகுல், “முதல்வர் தனது குடும்ப கட்டுப்பாட்டுக் கருத்து மூலம் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தினரை மட்டுமே குற்றம் சாட்டுகிறார். முதல்வருக்கு 6 சகோதரர்கள் உள்ள போது அவர் மற்றவர்களுக்கு குடும்ப கட்டுப்பாடு பற்றி உபதேசிக்க வேண்டாம்.” எனக் கண்டனம் தெரிவித்துள்ளார்.