டில்லி:

இஸ்லாமியர்கள் ஒரு கையில் குரானும், மற்றொரு கையில் கம்ப்யூட்டரும் வைத்திருக்க வேண்டும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

புரிதல் மற்றும் நிதானத்தை ஊக்குவிக்கும் இஸ்லாமிய பாரம்பரியம் என்ற நிகழ்ச்சி டில்லியில் நடந்தது. இதில் ஜோர்டான் 2வது மன்னர் அப்துப்பா கலந்துகொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரதமர் மோடி பேசுகையில்,‘‘ தீவிரவாதம் மற்றும் முற்போக்குத்தனத்துக்கு எதிரான நடவடிக்கை என்பது எந்த ஒரு மதத்துக்கும் எதிரானது கிடையாது. இளைஞர்களை தவறாக வழிநடத்தும் மனநிலைக்கு எதிரானதாகும். ஒவ்வொரு மதமும் மனித இனத்தின் மதிப்பை ஊக்குவிக்கின்றன.

உலகில் உள்ள அனைத்து பெரிய மதங்களுக்கும் இந்தியா தொட்டில் போன்று உள்ளது. இந்தியாவின் ஜனநாயகம் என்பது பழமையான பன்முகத்தன்மையின் கொண்டாட்டம். இஸ்லாமின் மனிதாபிமான செயல்களில் இளைஞர்கள் தங்களை இணைத்துக் கொள்ள வேண்டும். அதோடு நவீன தொழில் நுட்பத்தையும் பயன்படுத்த வேண்டும். இஸ்லாமியர்கள் ஒரு கையில் குரானும், மற்றொரு கையில் கம்ப்யூட்டரும் வைத்திருக்க வேண்டும்’’ என்றார்.

மன்னர் அப்துல்லா பேசுகையில், ‘‘மதத்தின் பெயரால் வெறுப்பை பரப்புவோரை அடையாளம் கண்டு நிராகரிக்க வேண்டும். இன்டர்நெட் மற்றும் இதர வழிகள் மூலம் வெறுப்பு பரவுவதை தடுக்க வேண்டும். வளம் மற்றும் செழிப்பை ஏற்படுத்தவே நம்பிக்கைகள் அனுமதி வழங்குகிறது.

கொந்தளிப்பு ஏற்படுவதை நாம் வலுவான முறையில் எதிர்க்க வேண்டும். இஸ்லாமியர் மற்றும் இஸ்லாமியர் அல்லாதவர்கள் ஒருவொருக்கு ஒருவர் இணைந்து செயல்பட வேண்டும்’’ என்றார்.