டில்லி:

‘‘கார்த்தி சிதம்பரம் கைது செய்யப்பட்ட விவகாரத்தில் பாஜக.வின் சதி உள்ளது. அதோடு ரூ.6,712 கோடி வங்கி பணத்துடன் மற்றொரு தொழிலதிபர் வெளிநாடு தப்பி சென்றுள்ளார்’’ என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது

காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜிவாலா டில்லியில் நிருபர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறுகையில், ‘‘கார்த்தி சிதம்பரம் கைதுக்கு பின்னால் பாஜக.வின் சதி உள்ளது. அரசியல் பழிவாங்கும் செயல்களுக்கு சிபிஐ பயன்படுத்தப்படுகிறது. ஐஎன்எக்ஸ் மீடியாவுக்கு அனுமதி வழங்கிய விவகாரத்தில் 6 மாதங்களுக்கு பின் சிபிஐ கண் விழித்தது ஏன்?. நிரவ் மோடிக்கு எதிராக பிரதமர் மோடி ஏன் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை?.

நிரவ் மோடி பாணியில் குஜராத்தை சேர்ந்த வைர வியாபாரி ஜத்தின் மேத்தா என்பவர் பொதுத் துறை வங்கிகளில் இருந்து ரூ. 6,712 கோடியை அபகரித்துள்ளார். இவர் போலி ஆவணங்களை தயாரித்து வங்கிகளில் கடன் பெற்று, பின்னர் அந்த பணத்தை வெளிநாட்டிற்கு அனுப்பிவிட்டார். இது குறித்து மோடி அரசுக்கு நன்றாக தெரியும்’’ என்றார்.

மேலும், அவர் கூறுகையில், ‘‘2014ம் ஆண்டிலேயே இந்த குற்ற செயல் குறித்து சிபிஐ மற்றும் பொருளாதார குற்றப் பிரிவில் வங்கிகள் புகார் செய்துள்ளது. ஆனால் அவர் மீது எவ்வித நடவடிக்கையும் எ டுக்கப்படவில்லை. கடனை திருப்பி செலுத்தக் கூடிய தகுதியுள்ள நபர் ஜத்தின் மேத்தா என்று சில வங்கிகள் தெரிவித்திருப்பதாக பெரு நிறுவனங்கள் விவகாரத் துறை அமைச்சகம் ஒப்புக் கொண்டுள்ளது. ஜத்தின் மேத்தாவும், அவரது மனைவியும் நாட்டை விட்டு வெளியேறிவிட்டனர்’’ என்றார்.

வெளிநாட்டு தப்பிச் சென்று நிரவ் மோடிக்கு சிபிஐ சம்மன் அனுப்பியது. இதற்கு‘‘தொழில் நிமித்தமான வெளிநாட்டு பணிகளின் மும்முரமாக இருக்கிறேன்’’ என்று பதிலளித்துள்ளார். முன்னதாக இவரது பாஸ்போர்ட்டை தற்காலிக முடக்குவது தொடர்பான சம்மனை பெறாமல் தப்பித்து வருகிறார். தற்போது நிரவ் மோடிக்கு எதிரான ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரன்டை அமலாக்கத் துறை பிறப்பித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.