சென்னை

மிழகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு தொழுகை நடத்தினர்.

தியாகத் திருநாள் என அழைக்கப்படும் பக்ரீத் பண்டிகை ஒவ்வொரு ஆண்டும் துல்ஹஜ் 10 ஆம் நாள் கொண்டாடப்படுகிறது. பக்ரித் தொழுகை நடந்த பிறகு ஆடு, மாடு, ஒட்டகம் உள்ளிட்டவைகளை பலி கொடுத்து இதில் கிடைக்கும் இறைச்சியை 3 பாகங்களாக பங்கு பிரிப்பர்.

முதல் பாகத்தை தனது குடும்பத்தினருக்கும், 2ஆவது பாகத்தை தனது உறவினர்களுக்கும் 3ஆவது பாகத்தை ஏழை எளியவர்களுக்கும் கொடுப்பது வழக்கம். அரபு நாடுகளில் பக்ரீத்தை முன்னிட்டு ஜூன் 15 ஆம் தேதி முதல் ஜூன் 18ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நாகூரில் இஸ்லாமியர்கள் தொழுகை நடத்தினர். ஜாக் அமைப்பு சார்பாக நடைபெற்ற இந்த சிறப்புத் தொழுகையில், நாடு முழுவதும் மக்கள் அமைதியாக வாழ வேண்டும் என்று துவா செய்து ஒருவருக்கொருவர் ஆரத்தழுவி பக்ரீத் வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டனர்.

ஜாக் அமைப்பின் மாநிலச் செயலாளர் அன்சாரி பிர்தவுசி, பக்ரீத் பண்டிகை தொடர்பான உரை நிகழ்த்தி, வாழ்த்து கூறினார். பக்ரீத் பண்டிகை கொண்டாடிய முஸ்லிம்கள், ஏழை மக்களுக்கு குர்பானியாக ஆடு, மாடு உள்ளிட்டவற்றின் இறைச்சியை தானமாக அளித்தனர்.