தானே: மராட்டிய மாநிலம் தானே பகுதியில் உள்ள திவாவில் ஒரு கால் டாக்சி ஓட்டுநர், கும்பல் ஒன்றினால், ஜெய்ஸ்ரீராம் கோஷமிட வலியுறுத்தி கடுமையாக தாக்கப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.

ஃபைஸல் உஸ்மான் கான் எனும் பெயருடைய அந்த இளைஞர், ஒரு பயணியை ஏற்றி வருவதற்காக திவாவுக்கு சென்றுள்ளார். அப்போது அவரின் காரில் சிறிது கோளாறு ஏற்பட்டுள்ளது. அவர் பார்க்கிங் விளக்குகளை ஆன்செய்துவிட்டு, காரை ஸ்டார்ட் செய்ய முயற்சித்துக் கொண்டிருந்துள்ளார்.

அப்போது, அங்கே இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேர் கொண்ட கும்பல் ஒன்று, ஃபைஸல் உஸ்மான் கானை வசைபாடத் தொடங்கி, பின்னர் தாக்கவும் தொடங்கியுள்ளது. இதைப் பார்த்த பயணி காரிலிருந்து இறங்கி சென்றுவிட்டார்.

பின்னர், ஜெய்ஸ்ரீராம் என்று கோஷமிடுமாறு ஃபைஸல் உஸ்மான் கானை வற்புறுத்தியபடியே தாக்கத் தொடங்கியுள்ளது அந்த கும்பல். இறுதியாக நினைவிழக்கும்வரை தாக்கிய அவர்கள், பின்னர் அந்த ஓட்டுநரின் செல்ஃபோனை திருடிக்கொண்டு அங்கிருந்து ஓடிவிட்டனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கான் அளித்த வாக்குமூலத்தின்படி, சம்பந்தப்பட்ட குற்றவாளிகளின் மீது வழக்குப்பதிவு செய்துள்ளது காவல்துறை.

சில நாட்களுக்கு முன்னர் இத்தகைய ஒரு சம்பவம் ஜார்க்கண்ட் மாநிலத்தில் நடைபெற்று, ஒரு முஸ்லீம் இளைஞர் கொல்லப்பட்டது நமக்கு நினைவிருக்கலாம்.