க்னோ

ராமர் கோயில் கட்டுவது பற்றி ஒரு சுமுக தீர்வுக்காக ஆர் எஸ் எஸ் இயக்கத்தின் இஸ்லாமியர் பிரிவான முஸ்லிம் ராஷ்டிரிய மன்ச் லக்னோவில் இருந்து அயோத்தி வரை பாத யாத்திரை நடத்த உள்ளது.

ஆர் எஸ் எஸ் இயக்கத்தின் இஸ்லாமியர் பிரிவு முஸ்லிம் ராஷ்டிரிய மன்ச்.  இந்த இயக்கத்தின் உத்திரபிரதேசம், ஜார்க்கண்ட் பிராந்திய தலைவர் குர்ஷீத் ஆகா பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றை நிகழ்த்தினார்.

அந்த சந்திப்பில் அவர் கூறியதாவது :

”நாட்டின் பல பகுதிகளிலும் உள்ள முஸ்லிம் ராஷ்டிரிய மன்ச் தலவர்களில் சுமார் 100 பேர் ராமர் கோயில் கட்டுவதைப் பற்றி ஒரு சுமுக தீர்வு காண்பதற்காக செப்டம்பர் 11 முதல் பாத யாத்திரை நடத்த உள்ளனர். லக்னோவிலிருந்து அயோத்தி வரை நடைபெறும் இந்த யாத்திரையில் வழியில் உள்ள இஸ்லாமிய தலைவர்களிடம் ராமர் கோயில் கட்ட ஒப்புக் கொள்வது பற்றி பேச்சு வார்த்தை நடத்த உள்ளோம்.

இஸ்லாமியர்களிடம் ராமர் கோயில் அயோத்தியில் தான் அமைய வேண்டும் என்பதைப் பற்றி எடுத்துச் சொல்வோம்.   நமக்கு மெக்கா மதினா போலவே இந்துக்களுக்கு அயோத்தி என்பதை புரிய வைப்போம்.  சமீபத்தில் உச்ச நீதி மன்றம் இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் இடத்தில் மசூதி கட்டிக் கொள்ளலாம் என்பதை இஸ்லாமிய சமூகத்தில் வலியுறுத்துவோம்.   அகழ்வாராய்ச்சியில் பல சிலைகள் கிடைத்துள்ளன.  அவைகள் அங்கு கோயில் இருந்ததை நிரூபிக்கின்றன.

இந்துக்கள் ராமர் கோயிலை அயோத்தியில் தான் கட்ட முடியும்.  பாகிஸ்தானில் கட்ட முடியாது.  யாத்திரை முடிவில் அயோத்தியில் செப்டம்பர் 17ஆம் தேதி ஒரு மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெறும்.  இந்த பாத யாத்திரை வெற்றி அடைந்த பின் இதே போல் அயோத்திக்கு வாரணாசி, ரே பரேலி, ஆஸம்கர் ஆகிய இடங்களில் இருந்து பாத யாத்திரை நடத்தப்படும்.” என தெரிவித்துள்ளார்.