டில்லி:

யோத்தி சர்ச்சைக்குரிய ராமஜென்ம பூமி தொடர்பான வழக்கு உச்சநீதி மன்றத்தில் காரசாரமாக நடைபெற்று வருகிறது. இன்றைய விசாரணையின்போது, ராமர் பிறந்த இடமாக கூறப்படும் ராம் சபுத்ரா தான் ராமர் பிறந்த இடம் என்று முஸ்லிம் அமைப்பு வழக்கறிஞர் ஒப்புதல் வழங்கி உள்ளார்.

உத்தரபிரதேசத்தில் அயோத்தியில் பாபர் மசூதி இருந்த சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை சன்னி வக்பு வாரியம், நிர்மோகி அகாரா, ராம் லல்லா ஆகிய மூன்று அமைப்பினரும் சொந்தம் கொண்டாடி வருகின்றனர். இது தொடர்பாக அலகாபாத் உயர்நீதிமன்றம்  அளித்த தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுக்களை சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் தலைமையில் 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன பெஞ்ச் விசாரித்து வருகிறது.

கடந்த ஒரு மாதமாக வழக்கு தினசரி விசாரிக்கப்பட்டு வருகிறது. அக்டோபர் 18க்குள் விசாரித்து முடிக்க தலைமைநீதிபதி ரஞ்சன் கோகாய் முடிவு செய்துள்ளார்.

இந்த நிலையில், நேற்று  நடைபெற்ற விசாரணையின்போது, முஸ்லீம் தரப்பு சார்பில் வாதாடிய மூத்த வழக்கறிஞர் ஜிலானி,  ராமர் அயோத்தி யில் பிறந்தார் என்றும், அங்குள்ள ராம் சபுத்ரா (ஒரு தளம்)தான் அவரது சரியான பிறப்பு இடம் என்பதை ஏற்றுக்கொண்ட தாகவும் கூறினார்.

முஸ்லிம் அமைப்பு சார்பில், மூத்த வழக்கறிஞர் ஜாபரியப் ஜிலானி ஆஜரானார். அவர், பாபர் மசூதியின் வெளி முற்றத்தில் ராமர் பிறந்த இடம் என்பது உண்மை என்றும், ஆனால்,  ஒருபோதும் பாபர் மசூதிக்குள் கிடையாது, ராம் சபுத்ரா பகுதி,  இந்துக்களால் இறைவன் ராமின் பிறப்பிடமாக வணங்கப்பட்டது என்று கூறினார்.

மேலும், தனது வாதம்  என்னவென்றால், பாபரி மஸ்ஜிதிற்குள் இருக்கும் இடத்தை இந்துக்கள் ஒருபோதும் ராமரின் பிறப்பிடமாக வணங்கவில்லை. ஆனால் அவர்கள் ராம் சபுத்ராவை பிறப்பிடமாக வணங்கினர். ராம் சபுத்ரா மசூதியிலிருந்து 50அடி தூரத்துக்குள் இருக்கும் என்றார்.

இந்த வழக்கில்  முன்னதாக முஸ்லிம் தரப்பிற்காக பல நாட்கள் வாதிட்ட மூத்த வழக்கறிஞர் ராஜீவ் தவான், ஜிலானியைப் போலல்லாமல், ராம் சபுத்ரா ராமர் பிறந்த இடம் என்று ஒருபோதும் ஒத்துக்கொள்ளாத நிலையில், தற்போது வாதாடிய ஜிலானி, அதை ஒப்புக்கொண்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அதைத்தொடர்ந்து கேள்வி எழுப்பிய நீதிபதி பாப்டே, “ஆகவே, ராமர் அயோத்தியில் பிறந்தார் என்பதில் உங்களுக்கு எந்த சர்ச்சையும் இல்லை” என்று  மீண்டும் வழக்கறிஞர் ஜிலானியிடம் கேட்டார்.

“அதற்கு எந்த சர்ச்சையும் இல்லை. எங்கள் தகராறு மசூதிக்குள் பிறந்த இடம் என்ற அவர்களின் நிலைப்பாட்டைப் பற்றியது ”என்று  ஜிலானி பதிலளித்தார்.

“ஆனால் ராம் சபுத்ரா பிறப்பிடம் என்பதை நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்கள்” என்று நீதிபதி பாப்டே தொடர்ந்தார். “நாங்கள் அதை ஏற்றுக்கொள்கிறோம், ஏனெனில் ஒரு மாவட்ட நீதிபதி கண்டுபிடித்துள்ளார்” என்றும் ஜிலானி பதிலளித்தார்.

ஆனால் நீதிபதி அசோக் பூஷண் தலையிட்டு ராம் சபுத்ரா சரியான பிறப்பிடம் என்று எந்த நீதி மன்றமும் முடிவு செய்யவில்லை என்று விளக்கம் அளித்தார்.