
மீரட்
பசு பாதுகாவலர்களுக்கு பயந்து ஒரு இஸ்லாமிய நகராட்சி உறுப்பினர் தனது பசுவை காவல் நிலையத்தில் கொண்டு வந்து கட்டி வைத்துள்ளார்
மீரட் நகராட்சி சபையின் உறுப்பினர் அப்துல் கப்பார் பகுஜன் சமாஜ் கட்சியை சேர்ந்தவர் ஆவார். இவர் மீரட் நகரின் 73 ஆவது வார்டில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஆவார். சமீபத்தில் மீரட் நகரில் ஒருவர் தனது பசுவை இஸ்லாமியர் ஒருவருக்கு விற்றார். இந்து அமைப்பை சேர்ந்த பசு பாதுகாவலர்கள் சிலர் அவரை மிகவும் துன்புறுத்தினார்கள். அதனால் கப்பார் மிகவும் மன வேதனை அடைந்தார்.
அதனால் அப்துல் கப்பார் தான் வளர்த்து வந்த பசுவை நான்சுண்டி காவல் நிலையத்தில் கொண்டு வந்து கட்டி வைத்தார். அத்துடன் அந்த காவல் நிலைய அதிகாரி சஞ்சய் குமார் என்பவரிடம் அந்தப் பசுவை வளர்க்க யாராவது முன் வந்தால் அவர்களிடம் அளித்து விடுமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து அப்துல் கப்பார், “இந்தப் பசுவை நான் கன்றுக்குட்டி பருவத்தில் இருந்து வளர்த்து வருகிறேன். இந்து மதத்தை சேர்ந்த ஒரு குறிப்பிட்ட குழுவினர் இஸ்லாமியர்கள் தங்கள் வீடுகளில் பசு வளர்ப்பதை கண்டித்து மிகவும் துன்புறுத்தி வருகின்றனர். இந்நிலையில் இஸ்லாமியனான நான் பசுவை எனது செல்லப் பிராணியாக வீட்டில் வளர்க்க பயப்படுகிறேன். அதனால் இவ்வாறு இந்தப் பசுவை மனமில்லாமல் காவல் நிலையத்தில் கட்டி வைத்தேன்” எனக் கூறி உள்ளார்.
காவல்துறை உயர் அதிகாரி மான்சிங் சௌகான் இதற்கு மிகவும் வருத்தம் தெரிவித்துள்ளார். அவர் அப்துல் கப்பாரிடம் பசுவை திரும்ப அவரது வீட்டுக்கு கூட்டிச் செல்ல வற்புறுத்தி உள்ளார். ஆனால் அப்துல் கப்பார் அந்த பசுவை மீண்டும் அழைத்துச் செல்ல மறுத்து விட்டார்.
[youtube-feed feed=1]