சென்னை: மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடம் அமைந்துள்ள மெரினா கடற்கரையில், ஜெயலலிதா மெழுகு சிலையுடன் கூடிய அருங்காட்சியம் அறிவுசார் பூங்கா அமைக்கும் பணி முடிவுக்கு வந்துள்ளது. அதை, ஜெயலலிதாவின் பிறந்தநாளான வருகிற 24-ந் தேதி திறக்க தமிழகஅரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி ள்ளன.
சென்னை மெரினா கடற்கரையில் எம்.ஜி.ஆர். சமாதி வளாகத்தில், ஜெயலலிதாவுக்கும் பீனிக்ஸ் பறவை மாடலில் நினைவிடம்அமைக்கப்பட்டது. அதை, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஜனவரி 27-ந் தேதி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். ஒருசில நாட்கள் மட்டுமே பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்ட நிலையில், திடீரென நினைவிடம் முடப்பட்டது. அதைத்தொடர்ந்து அருகே அமைக்கப்பட்டு வந்த ஜெயலலிதா, அருங்காட்சியகம் மற்றும் அறிவுசார் பூங்கா கட்டிடங்களின் இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வந்தன.
இந்த நிலையில், வரும்24ந்தேதிஜெ.வின் பிறந்தநாளன்று, அருங்காட்சியகத்தை திறந்த வைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
இந்த அருங்காட்சியகமானது, ஜெயலலிதாவின் சமாதியின் இடது பக்கத்தில் 8 ஆயிரத்து 555 சதுர அடியில் அமைக்கப்பட்டுள்ளது. அதுபோல ஜெ.சமாதியின் வலது பக்கத்தில் அதே அளவில் அறிவுசார் பூங்காவும் ரூ.12 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வருகிறது.
அருங்காட்சியகத்தில் ஜெயலலிதாவின் 6 அடி உயர மெழுகு சிலை, அவரது கலை மற்றும் அரசியல் துறையின் சாதனை பயணங்களின் புகைப்பட தொகுப்பு, அவர் பெற்ற விருதுகள், பயன்படுத்திய பொருட்கள் மற்றும் புகைப்பட தொகுப்புகள் ‘டிஜிட்டல்’ வடிவில் இடம் பெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், வீடியோ, ஆடியோ தொகுப்புகளும் இடம் பெற உள்ளது.
அறிவுசார் பூங்காவில் தன்னம்பிக்கை ஊட்டும் ஜெயலலிதாவின் சாதனைகள், மக்கள் நலன் கருதி செயல்படுத்திய திட்டங்களின் தொகுப்புகள், பணிகள், பேச்சு தொகுப்புகள், மாணவர்களுடனான கலந்துரையாடல், அவர் சொல்லிய குட்டி கதைகள் போன்ற பேச்சுகள் ‘டிஜிட்டல்’ வடிவில் ஒளிபரப்பு செய்யும் வகையில் அமைக்கப்பட்டு வருகிறது. ஜெயலலிதாவின் பொன்மொழிகள் தமிழிலும், ஆங்கிலத்திலும் பொறிக்கப்பட்டு உள்ளன.
அத்துடன் டிஜிட்டல் முறையில் அமைக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவின் உருவம் அருகில் பார்வையாளர்கள் நின்று ‘செல்பி’யும் எடுத்து கொள்ளும் வசதியும் செய்யப்பட்டு வருகிறது.
ஜெயலலிதா நினைவிடத்துக்கு உள்ளே செல்வதற்காக 2 பக்கவாட்டிலும் 110 அடி நீளத்துக்கு மேற்கூரையுடன் கூடிய நவீன நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த மேற்கூரைகள் மீது சூரிய ஒளிதகடு (சோலார்) பொருத்தப்பட்டு உள்ளது. இதன் மூலம் கிடைக்கும் மின்சாரம் ஜெயலலிதா நினைவிட பயன்பாட்டுக்கு பயன்படுத்தப்பட உள்ளது.
தற்போது, அதற்கான கட்டிடப்பணிகள் முடிவடைந்து, இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்ற வருகின்றன. அதைத் தொடர்ந்து, , வருகிற 24-ந் தேதி ஜெயலலிதாவின் பிறந்த நாளில் அருங்காட்சியகத்தை திறக்க அரசு முடிவு செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.