மதுரையில், இன்று இந்து முன்னணி சார்பில் ‘குன்றம் காக்க… கோவிலை காக்க…’ எனும் தலைப்பிலான முருக பக்தர்களின் பிரமாண்ட மாநாடு நடைபெறுகிறது.

பாண்டிகோயில் அருகே உள்ள அம்மா திடலில் இன்று மதியம், 3:00 மணி முதல் இரவு, 8:00 மணி வரை நடைபெறும் இந்த மாநாட்டின் முக்கிய நிகழ்வாக மாலை, 6:00 மணிக்கு கந்த சஷ்டி கவசம் பாடப்படுகிறது.

அதற்காக மாநாடு நடைபெற உள்ள இடத்தில் ஒரு லட்சம் பேர் அமரக்கூடிய வகையில் பிரம்மாண்ட மேடை அமைக்கப்பட்டுள்ளது.

மாநாட்டு அரங்கிலும், வெளியிலுமாக 5 லட்சம் பக்தர்கள் ஒரே நேரத்தில் கந்த சஷ்டி கவசம் பாடி கின்னஸ் சாதனை படைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக, ஹிந்து முன்னணி நிர்வாகிகள் தெரிவித்தனர்.

இந்நிகழ்ச்சியில், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், ஆந்திர மாநில துணை முதலமைச்சர் பவன் கல்யாண், இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், பாஜக மாநில் தலைவர் நயினார் நாகேந்திரன், பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் ஆகியோர் கலந்துகொள்ள உள்ளதாகக் கூறப்பட்டது.

மேலும், ஆறு படை வீடுகளை ஒரு சேர ஒரே இடத்தில் அமைத்தது போல் செட் போடப்பட்டுள்ளது.

இதையடுத்து இந்த முருக மாநாட்டில் கலந்து கொள்ள மதுரை மட்டுமன்றி அதன் சுற்றுப்பகுதி மற்றும் வெளியூர்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மதுரையில் குவிந்து வருகின்றனர்.

இந்த நிலையில், உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் இந்த மாநாட்டில் பங்கேற்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சென்னையில் இருந்து இண்டிகோ விமானம் மூலம் மதுரை செல்ல திட்டமிட்டிருந்த நிலையில் அந்த விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

தவிர, இந்நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக ஹைதராபாத்தில் இருந்து தனிவிமானம் மூலம் வருவதாக திட்டமிட்டிருந்த ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண், விமானத்தில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப கோளாறு காரணமாக தாமதமாக வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.