சென்னை: தமிழ்நாட்டில் கொலை குற்றங்கள் குறைந்துள்ளன என சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமியின் குற்றச்சாட்டுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  பதிலளித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடர் மார்ச் 14ந்தேதி தொடங்கிய நிலையில், 30ந்தேதிவரை நடைபெறுகிறது. இந்த கூட்டத்தொடரில், 2025-26ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை, வேளாண் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அதன்மீதான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.

அதன்படி இன்று காலை அவை கூடியதும், கேள்வி நேரத்தின்போது உறுப்பினர்களின் கேள்விகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்தனர். அப்போது, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, தமிழ்நாட்டில் கொலை சம்பவங்கள் அதிகரித்து வருவதாகவும், சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாகவும், நெல்லையில் ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரி வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் மற்றும் நேற்று திருப்பூரில் நடைபெற்ற கொலை சம்பவங்கள்  உள்பட ஒரேநாளில் 4 கொலைகள் நடைபெற்றுள்ளது என  குற்றம் சாட்டினார்.

இந்த குற்றச்சாட்டுக்கு பதிலளித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது, ”தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் 4 கொலைகள் நடைபெற்று இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார். ஈரோடு சம்பவத்தில் சரித்திரப் பதிவேடு குற்றவாளி நேற்று கொலை செய்யப்பட்டார். இதில் தொடர்புடைய  குற்றவாளிகளை போலீசார் உடனடியாக கைது செய்துள்ளனர்.

முதல்கட்ட விசாரணையில் கோவை சம்பவம் உயிரை மாய்த்துக் கொண்டிருப்பதாக தெரியவந்துள்ளது. மதுரை சம்பவம் குறித்து விசாரிக்கப்பட்டு வருகின்றன.

சிவகங்கையில் குடும்பத் தகராறு காரணமாக கொலை நடைபெற்றுள்ளது.

எதிர்க்கட்சித் தலைவர் சட்ட ஒழுங்கு குறித்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். காவல்துறையினர் சுதந்திரமாக செயல்பட்டு குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுத்து வருகின்றனர். எந்தவிதமாக பாரபட்சமும் காட்டப்படுவதில்லை. குற்ற செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகளும், கூலிப் படையினரும் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

கடந்த 2024 மட்டும் 4,572 சமூக விரோதிகள் அடையாளம் காணப்பட்டு குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

கடந்த 2023ம் ஆண்டில் 49,280 கொலை, கொள்ளை குற்றங்கள் நடந்த நிலையில், காவல்துறையினரின் நடவடிக்கையால் 2024ஆம் ஆண்டுல் 31,498 ஆக குறைந்துள்ளது.  ஒரே ஆண்டில் 17,782 குற்றங்கள் குறைக்கப்பட்டுள்ளன.

சில கொலை குற்றங்கள் தொடர்பான காட்சிகள் இணையத்தில் வெளியாகும்போது, அதிக அளவிலான குற்றங்கள் நடைபெறுவதை போன்று திட்டமிட்டு பரப்பப்படுகிறது. உண்மையில் எண்ணிக்கை அடிப்படையில் 2024ல் கொலைகள் 6.8 சதவீதிம் குறைந்துள்ளன.

கடந்த 2012ம் ஆண்டு முதல் 2024 வரையிலான காலகட்டத்தில் நடைபெற்ற கொலைகளை ஆண்டு வாரியாக ஒப்பிட்டு பார்க்கையில், அதிமுக ஆட்சியில் 2012ல் 1,943 கொலைகள், 2013-ல் 1,927 கொலைகள் நடந்துள்ளன. கடந்த 12 ஆண்டுகளில் 2024ஆம் ஆண்டில்தான் மிகக் குறைவாக 1,540 கொலைகள் மட்டுமே நடைபெற்றுள்ளன”

இவ்வாறு கூறினார்.

கொலை நகரமாக மாறுகிறதா நெல்லை? திருநெல்வேலி மாவட்ட காவல்துறை மறுப்பு – விளக்கம்