கரூர்:

ரூர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும்  காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணியை இரண்டு இளைஞர்கள் கத்தியை காட்டி மிரட்டிய  சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கரூரில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளராக ஜோதிமணி களமிறக்கப்பட்டுள்ளார்.  அவரை எதிர்த்து, அதிமுக சார்பில்  தம்பிதுரை போட்டியிடுகிறார். அங்கு கடுமையான போட்டி நிலவி வருகிறது.

இந்த நிலையில், தொகுதிக்குட்பட்ட அரவக்குறிச்சி அருகே லிங்கநாயக்கன்பட்டியில் ஜோதிமணி பிரச்சாரம் செய்து கொண்டிருந்தபோது இரு வாலிபர்கள், ஜோதிமணியை கத்தியை காட்டி மிரட்டியதாக கூறப்படுகிறது.

இதையடுத்து  ஜோதிமணியின் அருகே இருந்த கட்சி பிரமுகர்கள், அந்த இரண்டு நபரையும் அடித்து உதைத்து, காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.

தனக்கு விடுக்கப்பட்ட மிரட்டல் குறித்து, வேட்பாளர் ஜோதிமணி   அரவக்குறிச்சி காவல்நிலையத் தில், ஒரு புகார் கொடுத்துள்ளார். மிரட்டல் விடுத்தவர்கள் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஜோதிமணி,  பிரச்சாத்தில் இருந்த எங்களை மறித்த இரண்டு பேர் இங்கு பிரச்சாரம் செய்யக்கூடாது. அமைச்சர் உங்களை உள்ளே விடக்கூடாது என்று சொல்லியிருக்கிறார் என்றார். அதற்குள் கூட இருந்த மற்றொருவர் கத்தியை எடுத்து குத்து என்றார். எனவே, அதிர்ச்சியடைந்த எங்கள் கட்சிக்காரர்கள், மிரட்டல் விடுத்தவர்களை, பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

தோல்வி பயத்தில் மக்களவைத் துணைத் தலைவர் தம்பிதுரையும், அமைச்சர் விஜயபாஸ்கரும் அடியாட்களை ஏவி விட்டு இருக்கிறார்கள் என்று குற்றம் சாட்டியவர், தம்பிதுரை போகும் இடமெல்லாம் மக்கள் விரட்டி அடிக்கின்றனர். என்னை மக்கள் அன்பாக வரவேற்கின்றனர். அந்த விரக்தியில் தம்பிதுரை எந்த எல்லைக்கும் செல்ல தயாராகி விட்டார் என்று கூறி உள்ளர்.

இதற்கிடையில் கத்தியை காட்டி மிரட்டடி இருவரும்,  உள்ளூரைச் சேர்ந்தவர்கள் இல்லை என்பதும், அவர்களில் ஒருவர் பெயர் திருமூர்த்தி மற்றொருவர் பெயர் பெரியசாமி என்று தெரியவந்துள்ளது.