சென்னை: முரசொலி அறக்கட்டளை நிலம் பஞ்சமி நிலம் இல்லை என சென்னை  உயா்நீதிமன்றத்தில் வருவாய்த் துறை விளக்கம் அளித்துள்ளது. இதையடுத்து வழக்கின் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது.

முரசொலி அலுவலகம் அமைந்துள்ள நிலம் பஞ்சமி நிலம் இல்லை என்றும், அஞ்சுகம் பதிப்பகத்திற்கு சொந்தமானது என்றும் தமிழக அரசு தரப்பில் உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் தேசிய பட்டியலினத்தவர் ஆணையம் அனுப்பிய நோட்டீசை எதிர்த்து முரசொலி அறக்கட்டளை தொடர்ந்த வழக்கின் மீதான தீர்ப்பை உயர் நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்துள்ளது.

சென்னை கோடம்பாக்கத்தில்  திமுகவின் அதிகாரபூா்வ நாளேடான ‘முரசொலி அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த இடம் பஞ்சமி நிலம் என பாமக உள்பட பல கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. ஆனால், அது பஞ்சமி நிலம் அல்ல என வாதிடப்பட்டு வருகிறது.   இந்த நிலம், மொத்தம் 12 கிரவுண்ட் மற்றும் 1,825 சதுர அடியில் அமைந்துள்ளது.

இதுதொடர்பாக பாஜக மாநில நிா்வாகி சீனிவாசன் 2019-ஆம் ஆண்டு தேசிய பட்டியலின ஆணையத்தில் புகாா் அளித்தாா். இதையடுத்து, புகார் தொடர்பாக விளக்கம் கேட்டு ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது.

இதையடுத்து முரசொலி அறக்கட்டளை சார்பில்,  தேசிய பட்டியலின ஆணைய  நோட்டீஸை எதிா்த்தும், அறக்கட்டளை நிலம் தொடா்பாக விசாரிக்க ஆணையத்துக்கு அதிகாரம் இல்லை என்றும், சொத்துகளின் உரிமை தொடா்பான விவகாரம் என்பதால், பட்டியலின ஆணையம் விசாரிக்க முடியாது எனவும் முரசொலி அறக்கட்டளை நிா்வாக அறங்காவலா் ஆா்.எஸ்.பாரதி சென்னை உயா் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தாா். இந்த வழக்கு கடந்த 4 ஆண்டுகளாக இழுத்தடிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது மீண்டும் விசாரணைக்கு வந்தது.  வழக்கை நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம்  விசாரித்து வருகிறார். மனு தொடர்பாக தமிழ்நாடு அரசின் வருவாய்த்துறை விளக்கம் அளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையடுத்து முரசொலி வழக்கு நேற்று (ஜனவரி 4ந்தேதி) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது,   வருவாய்த் துறை சாா்பில் தாக்கல் செய்த பதில் மனுவை தாக்கல் செய்த வழக்கறிஞர் வில்சன்,  ‘சென்னை நுங்கம்பாக்கம் பதிவாளா் அலுவலக 1952-ஆம் ஆண்டு ஆவணங்களின்படி, அந்த நிலம் பஞ்சமி நிலம் இல்லை. ரயத்துவாரி நிலம் என வகைப்படுத்தப்பட்டுள்ளது. பஞ்சமி நிலம் என்பதற்கான ஆதாரங்கள் ஏதும் இல்லை”என தெரிவிக்கப்பட்டு உள்ளதாக கூறினார்.

அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரமன் லால் ஆஜராகி, ஜெர்மன் நிறுவனத்திடம் இருந்த நிலத்தை அதன் கலைப்பிற்கு பிறகு பார்வதி மாதவன் நாயர் என்பவருக்கு விற்றதாகவும், அவரிடமிருந்து அஞ்சுகம் பதிப்பகம் வாங்கியதாக கூறி ஆவணங்களை தாக்கல் செய்தார். எனவே முரசொலி அலுவலகம் அமைந்துள்ள இடம் அஞ்சுகம் பதிப்பகத்திற்கு சொந்தமானது என குறிப்பிட்டார். அதன்படி இந்த நிலம் பஞ்சமி நிலம் இல்லை எனவும் விளக்கம் அளித்தார்.

முரசொலி அறக்கட்டளை தரப்பில் மூத்த வழக்கறிஞர் வில்சன் ஆஜராகி, 2019ல் அளிக்கப்பட்ட புகார் மீது விசாரணை நடத்தப்பட்டதாகவும், ஆனால் இவ்வளவு காலமாக எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படாமல் இழுத்தடித்து வருவதாகவும் குறிப்பிட்டார். இந்த விவகாரத்தை கிடப்பிலேயே வைத்திருந்து அரசியல் ஆதாயம் தேடுதவற்கான செயலாகவே தெரிவதாகவும்,, அரசு நிதியில் செயல்படும் ஆணையத்தை தங்களுல்கு ஆதரவாக தவறாக பயன்படுத்தி தலைப்புச் செய்திகளில் இடம்பெறுவதற்கான நடைமுறைகளை மேற்கொண்டுள்ளதாகவும் குற்றம்சாட்டினார். மணிப்பூர் மக்கள் பாதிக்கப்பட்டபோது என்ன செய்தது தேசிய பட்டியலினத்தவர் ஆணையம் எனவும் கேள்வி எழுப்பினார்.

தேசிய பட்டியல் இனத்தவர் ஆணையம் தரப்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சுந்தரேசன் ஆஜராகி நிலத்தின் உரிமை யாருக்குள்ளது என ஆணையம் முடிவெடுக்காது என்றும், ஆனால் சம்பந்தப்பட்ட நிலம் பட்டியல் இனத்தவருக்கு ஒதுக்கப்பட்டதா என்பதை ஆய்வு செய்ய அதிகாரம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

புகார்தாரர் ஸ்ரீநிவாசன் தரப்பில் மூத்த வழக்கறிஞர் எஸ்.ரவி ஆஜராகி முரசொலி அறக்கட்டளை என்பது அந்த நிலத்தின் வாடகைதாரர் மட்டுமே என்பதால், அஞ்சுகம் பதிப்பகத்திடம் கேளுங்கள் என ஆணையத்திடம் சொல்ல முடியுமே தவிர, ஆணையம் அனுப்பிய நோட்டீசை ரத்து செய்யக்கோரி வழக்கு தொடர முடியாது என தெரிவித்தார். எஸ்.சி. மட்டும்தான் புகார் அளிக்க வேண்டும் என அவசியம் இல்லை என்றும், ஆனாலும் இதே விவகாரம் தொடர்பாக பட்டியல் இனத்தை சேர்ந்த பி.பெரியசாமி என்பவரும் புகார் அளித்துள்ளதாக தெரிவித்தார்.

தங்களிடம் ஆதாரங்கள் உள்ளதாகவும், ஆணையம் விசாரணைக்கு கேட்டால் ஆவணங்களை தாக்கல் செய்ய தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி சுப்பிரமணியம் , 1912-ஆம் ஆண்டுக்கு முன்பு நிலம் யாருக்குச் சொந்தமானதாக இருந்தது? அப்போது நிலம் என்னவாக இருந்தது? என வருவாய்த் துறைக்கு கேள்வி எழுப்பினாா். அதற்கு, 50 ஆண்டு ஆவணங்கள் மட்டுமே இருப்பதாகவும், மற்ற ஆவணங்கள் கிடைக்கவில்லை எனவும் வருவாய்த் துறை தெரிவித்தது.

தொடா்ந்து, முரசொலி தரப்பில் ஆஜரான வழக்கறிஞா், ‘பஞ்சமி நிலமாக ஆவணங்கள் இருந்தால், பதிவுத் துறையில் யாருடைய பெயருக்கும் பட்டா மாறுதல் பதிவு செய்ய முடியாது. எந்த சந்தேகமும் இல்லாத நிலையில் மட்டுமே, பட்டா மாறுதல் செய்ய அனுமதி வழங்கப்படும்.

பட்டியலின ஆணையம் தரப்பில், புகாா்கள் வரும் பட்சத்தில், அதை விசாரிக்க ஆணையத்துக்கு அதிகாரம் உள்ளது. உத்தரவுகள்தான் பிறப்பிக்க முடியாது. பட்டியலின மக்களின் நலன் பாதிக்கப்படும்போது, விசாரணை நடத்தப்படுவது சாதாரணமான நடைமுறை, புகாரில் உண்மை இருக்கும் பட்சத்தில், சம்பந்தப்பட்ட விசாரணை அமைப்பு தொடா்ந்து விசாரணை நடத்த ஆணையம் பரிந்துரை செய்யும் எனத் தெரிவித்தாா்.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, வழக்கின் தீா்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தாா்.