சென்னை: முரசொலி நிலம் விவகாரத்தில், தேசிய பட்டிலியன துணை தலைவர் முருகன் பாரபட்சமாக செயல்படுவதாக திமுக குற்றம்சாட்டி இருக்கிறது.
முரசொலி அறக்கட்டளைக்கு சென்னை கோடம்பாக்கத்தில் 12 கிரவுண்ட், 1,825 சதுர அடி நிலம் சொந்தமாக உள்ளது. இந்த நிலம் பஞ்சமி நிலம் என பாஜக தரப்பில் தேசிய பட்டியலின ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
புகார் மீதான விசாரணைக்கு திமுக தலைவர் ஸ்டாலினை வரும் 7ம் தேதி ஆணையத்தில் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க உத்தரவிடப்பட்டிருந்தது. இந் நிலையில், தேசிய பட்டியலின நல ஆணையத்திற்கு முரசொலி அறக்கட்டளை நிலம் தொடர்பாக விசாரிக்க அதிகாரம் இல்லை.
சொத்துகளின் உரிமை தொடர்பான விவகாரம் என்பதால் பட்டியலின ஆணையம் விசாரிக்க முடியாது என்று முரசொலி அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் ஆர்.எஸ். பாரதி மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி சி.வி கார்த்திகேயன், வரும் 7ம் தேதி டெல்லி தேசிய பட்டியலின ஆணைய விசாரணைக்கு ஸ்டாலினுக்கு பதிலாக அவரது பிரதிநிதி ஆஜராக அனுமதியளித்தார்.
அதே நேரத்தில் மனுவில், பட்டியலின ஆணைய துணைத் தலைவர் முருகன், பாரபட்சமாக நடந்து கொள்கிறார். அரசியலமைப்பு சட்ட விதிகளை அவர் மீறி இருக்கிறார் என்று திமுக குற்றம்சாட்டி இருக்கிறது. அரசியல் ஆதாயத்துக்காக பாஜகவுடன் கைகோர்த்து, செயல்படுகிறார் என்று தெரிவித்துள்ளது. இதற்கு பதிலளிக்குமாறு முருகனுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.
அதே நேரத்தில், எந்த ஆவணங்களின் அடிப்படையில் நிலம் பஞ்சமி நிலம் என்பதை வரும் 21ம் தேதிக்குள் தெரிவிக்குமாறு உத்தரவிட்டு, வழக்கை அன்றைய தினம் ஒத்தி வைத்தார்.