கொழும்பு: கடந்த சில ஆண்டுகளாகவே இலங்கையின் கிரிக்கெட் சூழல் சரியான முறையில் செல்லவில்லை என குற்றம் சாட்டியுள்ளார் அந்த அணியின் முன்னாள் சுழல் பந்து வீச்சாளரும், உலக சாதனையாளருமான முத்தையா முரளிதரன்.

அவர் கூறியுள்ளதாவது, “அணி நிர்வாகத்தில் அடிக்கடி தேவையற்ற மாற்றங்கள் ஏற்படுகின்றன. நபர்கள் வருகிறார்கள்…செல்கிறார்கள். வீரர்கள் தமது திறமையை நிரூபிக்க சரியான வாய்ப்புகள் தரப்படுவதில்லை.

தற்போதைய கேப்டன் திமுத் கருணாரத்னே சரியான தலைமைத்துவ பண்புடன் இல்லை என்றே கருதுகிறேன். ஒரு தலைவர் என்பவர் திட சித்தமுடன், உறுதியான ஒரு வீரராக இருக்க வேண்டும்.

இலங்கை அணி தென்ஆப்ரிக்காவில் பெற்ற வெற்றியை மட்டும் வைத்து, எல்லாம் நன்றாக இருக்கிறது என்று சொல்லிவிட முடியாது. நாம் ஆடும் ஆட்டங்களில் 90% தோல்வியடைந்து, வெறும் 10% மட்டுமே வென்றால் அதைக் கொண்டாட முடியுமா?

உலகத்தின் கிரிக்கெட் போக்கு இன்று நிறைய மாறியுள்ளது. எனவே, நாம் அதற்கேற்ப மாற வேண்டும். கிரிக்கெட் நிர்வாகத்தில் சிலர் எதை விரும்புகிறார்களோ, அதையே செய்கிறார்கள். உருப்படியான ஆலோசனைகளுக்கு அவர்கள் காது கொடுப்பதில்லை” என்றார்.