டெல்லி: சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக பணியாற்றி வரும் முனீஸ்வர்நாத் பண்டாரி, தலைமை நீதிபதியாக நியமித்து குடியரசு தலைவர் ஆணை பிறப்பித்துள்ளார்.

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீபதியாக இருந்த சஞ்சீவ் பானர்ஜி கடந்த 2021ம் ஆண்டு நவம்பர் மாதம் மேகாலயா மாநில உயர்நீதிமன்றத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து, அலகாபாத் நீதிமன்றத்தில் மூத்த நீதிபதியாக இருந்த முனீஸ்வர்நாத் பண்டாரி, சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். இதையடுத்து அவர்  கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பதவி ஏற்று பணியாற்றி வருகிறார்.

இவரை சென்னை  உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்க உச்சநீதிமன்ற மூத்த நீதிபதிகள் கொலீஜியம்  ஐனவரி 29-ந் தேதி பரிந்துரை செய்து, மத்திய சட்டத்துறைக்கு அனுப்பியது.

கொலிஜியத்தின் பரிந்துரையை ஏற்று, நீதிபதியாக உள்ள முனீஸ்வர்நாத் பண்டாரியை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நியமனம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

முனீஸ்வர்நாத் பண்டாரியின் சொந்த மாநிலம் ராஜஸ்தான். இவர்  2007-ம் ஆண்டு அம்மாநில உயர்நீதிமன்ற நீதிபதியாக  பதவி ஏற்றார். பின்னர், கடந்த 2019-ம் ஆண்டு அலகாபாத் உயர்நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டார். அங்கிருந்து சென்னை உயர்நீதிமன்றத்திற்கு பொறுப்பு தலைமை நீதிபதியாக மாற்றப்பட்டார். தற்போது அவர் சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள வுள்ள முனீஸ்வரன் நாத் பண்டாரியின் பணிக்காலம் 2022ஆம் ஆண்டு செப்டம்பர் 12ஆம் தேதியுடன் முடிவடைகிறது.