மும்பை

மும்பையில் உள்ள சித்தி விநாயகர் கோவிலில் மனிதர்கள் சாப்பிட முடியாமல் கெட்டுப்போன 16000 லிட்டர் நெய் ஏலம் விட உள்ளது.

மும்பையில் மிகவும் புகழ்பெற்ற ஆலயங்களில் சித்தி விநாயகர் கோவிலும் ஒன்றாகும்.  இங்கு தினசரி சுமார் 30000 பக்தர்கள் வருவது வழக்கமாக இருந்தது.   செவ்வாய்க்கிழமைகளில் சுமார் 1 லட்சம் பக்தர்கள் வருவார்கள்.  ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் தினசரி 50000 முதல் 60000 பக்தர்கள் வருவார்கள்.

இந்த கோவிலில் லட்டு பிரசாதம் மிகவும் புகழ் வாய்ந்ததாகும்.  தினசரி இந்த ஆலயத்தில் சுமார் 35000 முதல் 40000 ;லட்டுகள் விற்பனை ஆகும்.  விசேஷ தினங்களில் இந்த விற்பனை 1 லட்சத்தையும் தாண்டும்.  ஒரு லட்டு ரூ. 10 என்னும் விலையில் விற்பனை செய்யப்படுகிறது.  இந்த லட்டுக்களைச் செய்ய சுத்த நெய் நேரடியாகக் கொள்முதல் செய்யப்படுகிறது.

அவ்வகையில் கடந்த மார்ச் மாதம் சுமார் 16000 லிட்டர் நெய் ரூ.50 லட்சத்துக்குக் கொள்முதல் செய்யப்பட்டது.  அதன் பிறகு கொரோனா அச்சுறுத்தலால் அனைத்து வழிபாட்டுத் தலங்களும் மூடப்பட்டன.  அவ்வகையில் மும்பை சித்தி விநாயகர் கோவிலும் மூடப்பட்டது.   இங்கு நைவேத்ய பொருட்களை அளித்துள்ள வினியோகஸ்தர்கள் நெய் தவிர மற்ற பொருட்களைத் திரும்ப எடுத்துக் கொண்டுள்ளனர்.

ஆனால் நெய் விரைவில் கெட்டுப்போகும் என்பதால் அவர்கள் அதை திரும்ப எடுத்துக் கொள்ளவில்லை. ஊரடங்கு அதிகரித்ததால் நெய் மேலும் கெட்டுப் போய் தற்போது மனிதர்கள் சாப்பிட முடியாத நிலையை அடைந்துள்ளது.  எனவே இந்த நெய்யை மனிதர்கள் உண்ணக் கூடாது என்னும் கட்டுப்பாட்டுடன் ஏலம் விடச் சித்தி விநாயகர் கோவில் அறக்கட்டளை முடிவு செய்துள்ளது.

இது குறித்து ஆலய அறங்காவலர் ஒருவர், “முதலில் ஊரடங்கு அறிவிக்கப்பட்ட போது நிலைமை விரைவில் சீராகும் என நாங்கள் ந்மபினோம்.   ஆனால் 2020 ஆம் ஆண்டு நவம்பர் 5 அன்று தான் கோவில் திறக்கப்பட்டது.  அதற்குள் நெய் உபயோகிக்க அளிக்கப்பட்ட கெடு முடிவடையத் தொடங்கியது.  பக்தர்களும் மிக குறைந்த அளவில் வந்ததால் லட்டுக்கள் உற்பத்தியும் நிறுத்தப்பட்டது.

இதையொட்டி சிறு சிறு பாட்டில்களில் நெய்யை நிரப்பி விளக்குகள் ஏற்ற மட்டும் பயன்படுத்த வேண்டும் என எச்சரித்து பக்தர்களுக்கு அளிக்க  முதலில் அறக்கட்டளை நினைத்தது.  ஆனால் மக்கள் அதை உட்கொள்ளலாம் என்னும் அச்சம் எழுந்ததால் தற்போது ஏலம் விட முடிவு செய்யப்பட்டுள்ளது.   இந்த ஏலத்தின் மூலம் கொள்முதலுக்கு செலவழித்த தொகையில் சுமார் 60% முதல் 70% வரை கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.