மும்பையைச் சேர்ந்த தொழிலதிபரிடம் ரூ. 164 கோடி பணம் கேட்டு மிரட்டியது தொடர்பாக மும்பை குற்றப்பிரிவு போலீசார் நடத்திய விசாரணையில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அமலாக்கத்துறையால் (ED) விசாரிக்கப்படும் 200 க்கும் மேற்பட்ட வழக்குகளின் கோப்புகள் மற்றும் ஆவணங்களை கைது செய்யப்பட்ட நபர்களிடம் இருந்து மும்பை போலீசார் கைப்பற்றியுள்ளனர்.

இந்த கும்பல் பல்வேறு தொழிலதிபர்கள் மற்றும் பில்டர்களிடம் இருந்து 100 கோடி ரூபாய்க்கு மேல் பணம் பறித்திருக்கலாம் என குற்றப்பிரிவு போலீசார் சந்தேகிக்கின்றனர்.

மும்பை டி.என்.நகர் பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் ஒரு கட்டுமான பணி தொடர்பாக இரண்டு பில்டர்களுக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதில் ஒரு பில்டருக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் என்று சிலர் தொடர்ந்து போன் செய்து பணம் கேட்டு மிரட்டியுள்ளனர்.

இதனையடுத்து தொலைபேசியில் தொடர்பு கொண்டு அமலாக்கத்துறை அதிகாரி என்று கூறிய நபரை தனது நண்பர் ஒருவருடன் சந்திக்கச் சென்ற பில்டரிடம் தனது போட்டியாளரான மற்றொரு பில்டருக்கு ரூ.164 கோடி செலுத்த வேண்டும் அல்லது ED நடவடிக்கையை சந்திக்க நேரிடும் என மிரட்டல் விடுக்கப்பட்டது.

இது தொடர்பாக மும்பை குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டதை அடுத்து ரோமி பகத் என்று அழைக்கப்படும் ஹைர் ரமேஷ் பகத் உட்பட ஆறு பேரை போலீசார் கைது செய்தனர்.

காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அமலாக்கத்துறையால் வழக்கு தொடரப்பட்டவர்கள் குறித்த 200க்கும் மேற்பட்ட ஆவணங்கள் இவர்களிடம் இருப்பது தெரியவந்தது.

அமலாக்கத்துறையின் ரகசிய ஆவணங்கள் பணம் பறிக்கும் கும்பலிடம் சென்றது எப்படி என்று போலீசார் நடத்திய விசாரணையில் அமலாக்கத்துறையைச் சேர்ந்த அதிகாரி ஒருவருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து ரகசிய ஆவணங்களை மிரட்டி பணம் பறிக்கும் கும்பலுக்கு வழங்கி தொழிலதிபர்கள் உள்ளிட்ட பலரிடம் இருந்து ரூ. 100 கோடிக்கும் அதிகமாக பறித்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கூலிப்படையினரிடம் இருந்து 200க்கும் மேற்பட்ட ரகசிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்ட விவகாரத்தில் மிரட்டப்பட்ட தொழிலதிபர்களிடம் இருந்து பாஜக கட்சி நிதிக்காக ஏதேனும் தொகை வழங்கப்பட்டதா என்பது குறித்தும் விசாரிக்க வேண்டும் என்று கூறப்பட்டு வருவதை அடுத்து இந்த வழக்கு விசாரணை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.