பாலிவுட் திரைப்பட இயக்குனர் சுனில் தர்ஷன் தொடர்ந்த வழக்கில் கூகுள் சி.இ.ஓ. சுந்தர் பிச்சை மற்றும் யூ டியூப் நிர்வாக இயக்குனர் கவுதம் ஆனந்த் ஆகியோர் மீது மும்பை போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
சுனில் தர்ஷன் இயக்கி தயாரித்த 2017 ம் ஆண்டு வெளியான பாலிவுட் படமான ‘ஏக் ஹசினா தி ஏக் தீவானா தா’ என்ற படத்தை காப்புரிமை விதிகளை மீறி யூ-டியூபில் வெளியிட்டது தொடர்பாக வழக்கு தொடரப்பட்டது.
வழக்கை விசாரித்த மும்பை பெருநகர நீதிமன்றத்தின் கூடுதல் மாஜிஸ்திரேட் ஏ.ஏ. பஞ்ச்பாயிடம் தனது திரைப்படத்திற்கான காப்புரிமையை வேறு யாருக்கும் வழங்கவில்லை என்றும் தனது அனுமதி இன்றி யூ டியூபில் வெளியிடப்பட்டதாகவும் முறையிட்டார்.
வழக்கை விசாரித்த நீதிபதி, கூகுள் நிறுவன சி.இ.ஓ. சுந்தர் பிச்சை யூ டியூப் நிர்வாக இயக்குனர் கவுதம் ஆனந்த் தவிர கூகுள் நிறுவனத்தைச் சேர்ந்த மேலும் மூன்று அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனைத் தொடர்ந்து இவர்கள் மீது மும்பை போலீசார் வழக்குப்பதிவு செய்து எப்.ஐ.ஆர். தாக்கல் செய்துள்ளனர்.