மும்பை:
மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்கள் வெளியே வரும்போது மாஸ்க் அணிவது கட்டாயம் என்று மாநில அரசு உத்தரவிட்டு உள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் தீவிரமடைந்துள்ளது. இதற்கிடையில், மத்திய அரசு அமல்படுத்திய 21 நாட்களுக்கு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. வரும் 14ம் தேதி இந்த ஊரடங்கு முடிவடைய உள்ளது. ஆனால், ஊரடங்கை மேலும் நீட்டிக்க பல மாநில அரசுகள் வேண்டுகோள் விடுத்துள்ளன.
மகாராஷ்டிரா மாநிலத்திலும் நோய்தோற்று அதிகரித்து வருகிறது. மக்கள் நெருக்கம் மிகுந்த தாராவி பகுதியில் பலருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அந்த பகுதி முழுவதும் துண்டிக்கப்பட்ட, சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிரமாக நோய்த்தடுப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தில், பொதுமக்கள் வெளியில் வரும்போது, கொரோனா தொற்றில் இருந்து பாதுகாத்துக் கொள்ளும் வகையில் மாஸ்க் (முக்கவசம்) அணிவது கட்டாயம் என்று உத்தரவிட்டு உள்ளது.
உத்தரவை மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அவர்கள் தண்டிக்கப்படுவார்கள் அல்லது கைது செய்யப்படுவார்கள் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதுபோல ஒடிசாவில் வரும் 9ம் தேதி முதல் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வருவதாக இருந்தால், வாய் மற்றும் மூக்கை மறைக்கும் மாஸ்க்கை அணிந்துதான் வர வேண்டும் என அம்மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.