மும்பை:

12வயது பள்ளி சிறுவனை 200 தோப்புக்கரணம் எடுக்க வைத்து கொடுமை படுத்தியதாக மும்பை தனியார் பள்ளியை சேர்ந்த கராத்தே மாஸ்டர் மீது புகார் கொடுக்கப்பட்டுள்ளது.  அவர் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட சிறுவன் அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறான்.

மும்பையில்  உள்ள நலசோபரா என்ற தனியார் பள்ளில் படித்து வருபவர் கணேஷ் கும்ப்ளே. 12 வயதான இவர் அந்த பள்ளியில் கராத்தே வகுப்பிலும் சேர்ந்துள்ளார். மாணவர்களுக்கு தினசரி பள்ளி தொடங்குவதற்கு முன்பு கராத்தே வகுப்பு பள்ளியின் மொட்டை மாடியில் நடைபெறுவது வழக்கம்.

சம்பவத்தன்று  பள்ளியில் மாடியில் மற்ற சிறுவர்கள் அனைவரும் கராத்தே பயிற்சி செய்து கொண்டிருந்தபோது, சிறுவன் கணேஷ் அருகிலுள்ள சிறுவனுடன் பேசிக் கொண்டிருந்ததாகவும், அதற்காக அவனுக்கு 120 தோப்பு கரணம் எடுக்கும்படி தண்டனை வழங்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. அவனால் 100க்கு மேல்  தோப்புக்கரணம் போட முடியவில்லை என்று கூறியும் கராத்தே மாஸ்டரான சவுத்திரி மேலும் 100 தோப்புக்கரணம் போட வேண்டும் என்று கூறி  கொடுமைப் படுத்தியதாக கூறப்படுகிறது.

இதனால் சோர்வடைந்த அந்த சிறுவன் வீடு திரும்பியதும் கால் வலி காரணமாக உடனடியாக தூக்கி விட்டதாகவும், ஆனால் மறுநாள் காலை அவனால் எழுந்திருக்க முடியவில்லை என்றும் அவனது பெற்றோர்கள் கூறி உள்ளனர். அவன் காய்ச்சலாலும் உடல் வலியாலும் பாதிக்கப்பட்ட நிலையில், அதுகுறித்து விசாரித்தபோது, தனது பெற்றோரிடம் கணேஷ் உண்மையை கூறியதாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக பாதிக்கப்பட்ட சிறுவன் கணேஷ் கும்ப்ளே சிகிச்சைக்காக துளிஞ் பகுதியில் உள்ள மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், அவனது பெற்றோர் சவுத்ரி மீது துளிஞ் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.

இதையடுத்துகாவல்துறையினர் சவுத்திரி மீது சிறுவர் நீதி சட்டத்தின்படி (Juvenile Justice Act.) வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இதுகுறித்து பள்ளி நிர்வாகத்திலும் புகார் கொடுக்கப்பட்டிருப்பதாகவும், சம்பவம் நடைபெற்ற அன்று பதிவு செய்யப்பட்ட சிசிடிவி புட்டேஜ் கேட்டபோது, அது அழிந்துவிட்டடது என்று பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

சிறுவனை டார்ச்சர் செய்த கராத்தே மாஸ்டர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பள்ளி மாணவர்களின் பெற்றோர்களும் காவல்துறைக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.