Mumbai Indians emerge victorious after thrilling Super Over against Gujarat Lions
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் குஜராத்துக்கு எதிரான பரபரப்பான ஆட்டத்தில் மும்பை அணி சூப்பர் ஓவரில் வெற்றி பெற்றது.
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்று நடந்த போட்டியில் குஜராத், மும்பை அணிகள் மோதின. டாஸ் வென்ற குஜராத் அணி பேட்டிங்கை தேர்தெடுத்தது. மெக்கல்லம் 6 ரன், பிஞ்ச் 0, சுரேஷ் ரெய்னா 1 ரன், தினேஷ் கார்த்திக் 2 ரன் என தொடர்ந்து வெளியேற, என்னாச்சு இவங்களுக்கு? என்று கேள்வி கேட்கத் தோன்றியது. பேட்டிங்குக்கு சாதகமான இந்த ஆடுகளத்தில் குஜராத் அணி குப்புற விழுந்ததால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஓபனிங்கில் இறங்கிய இஷான் கிஷன் 48 ரன்களும், ஜடேஜா 28 ரன்களும் எடுத்து அணியை காப்பாற்றினர். நிர்ணயிக்கப்பட்ட ஓவர்களில் அந்த அணி 9 விக்கெட்டுக்கு 153 ரன்கள் எடுத்தது. மும்பை தரப்பில் குணால் பாண்ட்யா 3 விக்கெட்டுகளும், மலிங்கா, பும்ரா தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
அடுத்து ஆடிய மும்பை அணியின் பார்த்தீவ் பட்டேல் ஆரம்பம் முதலே அடித்து ஆடினார். அவர் 44 பந்துகளில், 9 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 70 ரன் எடுத்தார். அவர் ஆட்டம் இழந்ததும் தடுமாறியது மும்பை. அவருக்கு துணையாக பாண்ட்யா 29 ரன்கள் எடுத்தார். மற்றவர்கள் குறைந்த ரன்களில் நடையை கட்ட, கடைசி ஓவரில் மும்பையின் வெற்றிக்கு 11 ரன்கள் தேவைப்பட்டது. அந்த ஓவரை வேகப்பந்து வீச்சாளர் இர்பான் பதான் வீச, முதல் பந்தில் சிக்சர் அடித்தார் பாண்ட்யா. 2வது பந்தில் ஒரு ரன் எடுத்தார். 3வது பந்தில் பும்ரா ரன்-அவுட். மலிங்கா இறங்கினார். 4வது பந்தில் பாண்ட்யா 2 ரன்னும், 5வது பந்தில் ஒரு ரன்னும் எடுத்தார். கடைசி பந்தில் ஒரு ரன் தேவைப்பட பரபரப்பானது ஆட்டம். கடைசி பந்தை மலிங்கா அடிக்காமல் விட, எதிர்முனையில் நின்ற பாண்ட்யா ரன் எடுக்க ஓடினார். ஆனால், ஜடேஜா அவரை ரன்-அவுட் செய்தார். இதனால் மும்பை 20 ஓவர்களில் 153 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. போட்டி டை ஆனது.
பிறகு சூப்பர் ஓவர் முறை கடைபிடிக்கப்பட்டது. முதலில் பேட் செய்த மும்பை அணி, 11 ரன்கள் எடுத்தது. அடுத்து மும்பை தரப்பில் சூப்பர் ஓவரை பும்ரா வீசினார். அதை எதிர்கொண்ட குஜராத் ஜோடி பிரன்டன் மெக்கல்லமும், ஆரோன் பிஞ்சும் 6 பந்துகளை சந்தித்து 6 ரன் மட்டுமே எடுத்ததால், மும்பை வெற்றி பெற்றது. மும்பைக்கு இது 7-வது வெற்றி.