மும்பை,
இன்று இரவு 8 மணிக்குள் மருத்துவர்கள் வேலைக்குத் திரும்ப வேண்டும் இல்லையென்றால் 6 மாத சம்பளம் வழங்கப்படாது என்று மராட்டிய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. துலே மாவட்ட அரசு மருத்துவமனையில் சமீபத்தில் பயிற்சி டாக்டர் ஒருவர் நோயாளியின் உறவினரால் தாக்கப்பட்டார்.
இதை தொடர்ந்து நாசிக், மும்பை சயான் மருதுவமனையிலும் மருத்துவர்கள் தாக்கப்பட்டனர். இதை கண்டித்து மாநிலம் முழுவதும் பயிற்சி மருத்துவர்கள் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மாநிலம் முழுவதும் சுமார் 4 ஆயிரத்து 50 டாக்டர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதனால் வெளிநோயாளிகள் பிரிவு மூடப்பட்டது. நோயாளிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இந்நிலையில், பணிக்கு விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்களுக்கு மராட்டிய அரசு இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளது.
இன்று இரவு 8 மணிக்குள் பணிக்கு திரும்பவில்லை என்றால் ஆறு மாத சம்பளத்தை இழக்க நேரிடும் என்று மருத்துவ கல்வி மந்திரி கிரிஷ் மகாஜன் எச்சரிக்கை விடுத்துள்ளார். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆயிரத்திற்கு மேற்பட்ட மருத்துவர்களுக்கு விளக்கம் கேட்டு மும்பை நகராட்சி நோட்டீஸ் அனுப்பியுள்ளது.