மும்பை:

ரூ. 8.77 பிக்சட் டெபாசிட் மற்றும்  ரூ. 1.75லட்சம் காயன்களை மூட்டையாக கட்டி சேமித்து வைத்திருந்த  பிச்சைக்காரர் ரயிலில் அடிபட்டு பரிதாபமாக உயிரிழந்தார். இது நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மும்பையில் சமீபத்தில் பிச்சைக்காரர் ஒருவர் ரயிலில் அடிபட்டு உயிரிழந்தார். அவர் குறித்து விசாரணை நடத்திய காவல்துறையினர் அவர் வைத்திருந்த பையில் கிடைத்த தகவல்கள் மற்றும் அவர் சேமித்து வைத்திருந்த மூட்டைகளை பிரித்து பார்த்தபோது அதிர்ச்சி அடைந்தனர்.

விசாரணையில்,  அந்த பிச்சைக்காரர் பெயர் பிராடிசந்த் பன்னாராம்ஜி ஆசாத் என்பது தெரிய வந்துள்ளது. மும்பை கோவன்டி பகுதியில் தங்கி, ரயிலில் தினமும் பிச்சை எடுத்து வந்திருக் கிறார்.  கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு இவர், கோவன்டி-மன்கார்டு இடையே ரயிலில் அடிபட்டு தண்டவாளத்தின் அருகே பிணமாக கிடந்தார்.

ஆதரவற்ற பிச்சைக்காரர் என்பதால், மாநகராட்சி முலம் அவரது உடலை அடக்கம் செய்ய முயன்ற காவல்துறையினர், அவர் வைத்திருந்த அழுக்கு மூட்டைகளை பிரித்து பார்த்தபோது, அதனள்  2 வங்கி பாஸ்புக்  இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து, போலீசார் அவர் வசித்த ஒரு வீட்டில் சோதனை செய்த போது அவர்களுக்கு மேலும் அதிர்ச்சி காத்திருந்தது.

அங்கு  மொத்தம் ரூ.8 லட்சத்து 77 ஆயிரத்திற்கு வங்கி பிக்சட் டெபாசிட் ரசீதுகள் இருந்தன. ஏற்கனவே அவர் வைத்திருந்த 2 சேமிப்பு கணக்குகளில் ரூ.96 ஆயிரம் இருந்தது. இது தவிர அவரது வீட்டில் மூட்டை, மூட்டையாக சில்லரைக் காசுகள் இருந்தன. அந்த காசுகளை கடந்த சனிக்கிழமை மதியம் தொடங்கி மறுநாள் அதிகாலை வரை எண்ணினார்கள். அதில் மட்டுமே ஒன்றே முக்கால் லட்சம் ரூபாய் இருந்துள்ளது.

அந்த பிச்சைக்காரரின்  மகன் ராஜஸ்தானில் இருப்பதாகவும் தகவல் கிடைத்துள்ளது.   அவரை தேடி கண்டுபிடித்து பணத்தை கொடுப்பதற்கு மும்பை போலீசார் முயன்று வருகிறார்கள்.

இந்த சம்பவம் அதிர்ச்சியையும், நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.