சென்னை: முல்லைப் பெரியாறு அணையில் நீர் தேக்குவது தொடர்பாக : சட்டப்பேரவையில் அதிமுக கொண்டு வந்த கவன ஈர்ப்பு தீர்மானத்தில்  அமைச்சர் துரைமுருகன் விளக்கம் அளித்தார்.

4நாட்கள் விடுமுறைக்கு பிறகு இன்று சட்டப்பேரவை மீண்டும் கூடிறயது. இன்று கேள்வி நேரம் முடிந்ததும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, இயற்கை சீற்றங்கள் குறித்த துயர் தணிப்பு துறை மீதான மானிய கோரிக்கை விவாதம் நடக்கிறது. இந்த விவாதத்தில் பங்கேற்று ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர் கள் பேசினர். அதைத்தொடர்ந்து, சட்டப்பேரவையில்  அதிமுக சார்பில், முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்து குறித்து கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. எதிர்க்கட்சித் துணை தலைவர் ஓ. பன்னீர்செல்வம் உரையாற்றினார்.

இதற்கு பதில் அளித்து பேசிய அமைச்சர் துரைமுருகன், “அணை பாதுகாப்பு சட்டம் என்ற புதிய சட்டத்தை தற்போது கொண்டு வந்துள்ளார்கள். இந்தியாவில் இருக்கும் அனைத்து அணைகளும் அந்த சட்டத்திற்குள் அடங்கவுள்ளன. பெரிய அணைகள் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்வதற்காக இயக்கம், கண்காணிப்பு மற்றும் அனைத்து பாதுகாப்பு சமந்தமான நடவடிக்கைகளும் மேற்கொள்ள தனி அமைப்பு ஏற்படுத்தப்படுவதாக சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அமைப்பிற்குதான் எவ்வளவு தண்ணீர் திறக்க வேண்டும் போன்ற அனைத்து அதிகாரமும் வரவுள்ளன. இந்த அணை பாதுகாப்பு சட்டம் வருவதற்கு இன்னும் ஓராண்டு ஆகும். இந்த விவகாரத்தில் முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர்களுடன் பேசி விரைவில் முடிவெடுக்கப்படும்”.

இவ்வாறு அவர் கூறினார்.