சென்னை:
மூலக்கொத்தளம் சுடுகாட்டில் அரசு குடியிருப்புகள் அமைக்க ஆதரவு தருவோர், சென்னை எழும்பூரில் உள்ள ம.தி.மு.க. தலைமையகமான தாயகத்தை முற்றுகையிடப்போவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதையடுத்து தாயகத்தில் காவல்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
சென்னையில் உள்ள சுடுகாடுகளில் ஒன்றான மூலக்கொத்தளம் சுடுகாடு 300 - 400 ஆண்டுகள் மிகவும் பழமை வாய்ந்தது. இங்கு 1938-ல் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த நடராஜன் கல்லறை மற்றும் தாளமுத்து நடராஜன், முத்துக்குமாரின் எரியூட்டப்பட்ட நினைவிடம் ஆகியவை இருக்கின்றன.
இங்கு, தமிழக அரசு சார்பில் குடிசை மாற்று வாரியம் மூலம் குடியிருப்புகள் கட்டுவதற்கு ஆரம்ப கட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது. சுமார் 26 ஏக்கர் பரப்பளவு கொண்ட சுடுகாட்டை 4 ஏக்கர் கையகப்படுத்தி முதல் கட்ட பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.
இதை அரசியல் கட்சிகள் சில கடுமையாக எதிர்த்து வருகின்றன. தியாகிகள் நினைவிடும் உள்ள சுடுகாட்டுப் பகுதியில் அரசு குடியிருப்புகள் கட்டக்கூடாது என எதிர்ப்பு தெரிவிக்கின்றன.
முக்கியமாக, ம.தி.மு.க., கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்துள்ளது. இங்கு நேரடியாக சென்ற ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
“இந்த சுடுகாட்டில தியாகிகள் நினைவிடங்கள் உள்ளன. மேலும், இந்த பகுதியில் உள்ள மைதானத்தில் விளையாடிய மாணவர்கள், மாநில, தேசிய அளவில் வீரர்களாக உருவாகி உள்ளனர்.
இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கு எஸ்.சி- எஸ்.டி. கமிஷனின் ஆணையத்தில் நிலுவையில் உள்ளது.
ஆனால் தொடர்ந்து காவல்துறையினரால் இங்குள்ள மக்கள் மிரட்டுப்படுகிறார்கள்.
எடப்பாடி பழனிசாமி திராவிட இயக்கத்துக்கு கேடு விளைவிக்கிறார். ஆதி திராவிட குடியிருப்பு என சொல்கிறார்கள். இதே இடத்தில் அமைச்சர்கள் இருப்பார்களா?
இங்கு அரசு கட்டிட முயற்சியைத் தொடர்ந்தால், பத்தாயிரம் மக்களை திரட்டி போராடுவேன்” என்று வைகோ தெரிவித்தார்.
மூலக்கொத்தளம் பகுதி மக்களும், சுடுகாட்டில் குடியருப்பு கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
இந்நிலையில் அங்கு சுடுகாடு அகற்றப்பட வேண்டும் என்று விரும்புகின்ற சிலர், இன்று மதிமுக தலைமையகமான தாயகத்தை முற்றுகையிடப்போவதாக தகவல் வெளியாகி உள்ளது.
இது குறித்து மதிமுக தரப்பில், “மூலக்கொத்தளம் பகுதியில் வசிக்கும் சில பணம் படைத்தவர்கள் பணம் கொடுத்து ஆட்களை ஏவி தாயகத்தை முற்றுகையிட உள்ளதாக தகவல் கிடைத்திருக்கிறது. ஆனால் அங்கு அரசு குடியிருப்புகளைக் கட்டக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம்” என்று தெரிவித்தனர்.
இந்த நிலையில் தாயகம் அருகில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவுகிறது.