திருச்சி: புதிதாக கட்டப்பட்டு வரும் திருச்சி முக்கொம்பு புதிய கதவணையை ஜூன் 26-ல் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார். இந்த தகவலை அமைச்சர் நேரு தெரிவித்தார்.
கடந்த 2018-ம் ஆண்டு கொள்ளிடம் ஆற்றில் கட்டப்பட்டிருந்த பழைய பாலத்தின் 9 மதகுகள் இடிந்து சேதம் ஆனது. இதையடுத்து புதியபாலம் மற்றும் கதவணை கட்ட கடந்த அதிமுக ஆட்சியின்போது, திட்டமிடப்பட்டு பணிகள் நடைபெற்று வந்தது. இந்த பாலத்தின் பணிகள் முடிவடைந்த நிலையில், வரும் 26ந்தேதி திறந்து வைக்கப்படுகிறது.
முக்கொம்பு மேலணையில் கொள்ளிடம் ஆற்றில் புதிதாக கட்டப்பட்டு வரும் தடுப்பணை மற்றும் புதிய பாலத்திற்கான பணிகளை தமிழக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு செய்தார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய அமைச்சர் கே.என்.நேரு , வருகிற ஜூன் 26ம் தேதி தமிழக முதல்வர் திருச்சி வருகை தருகிறார். அன்றைய தினம் காலை 11 மணி அளவில் புதிதாக கட்டப்பட்ட முக்கொம்பு கொள்ளிடம் மேலணை பாலத்தை திறந்து வைக்கிறார் என்றார்.
தொடர்ந்து பேசியவர், இந்த புதிய பாலம், பழைய பாலம் போலவே குறுகலான பாலமாக திட்டமிடப்பட்டுள்ளது. அதுகுறித்து நிகழ்ச்சியின்போது முதல்வர் தெரிவிப்பார் என்றார்.
மேலும், திருச்சியில் புதிய காவிரி பாலம் கட்ட ஏற்கனவே ரூ.90 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருந்தது. தற்போது 130 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது. திருச்சி நகரின் காவிரி ஆற்றில் புதிய பாலம் மற்றும் எக்பிரஸ் எலிவேட்டர்-வே உள்ளிட்ட திட்டங்கள் விரைவில் துவக்கப்படும் என்றார்.