காவிரி விவகாரம் இன்னொரு திமிர்த்தனம்…

Must read

மேகதாது திட்டம் பற்றி விவாதிப்போம் என்கிறது காவேரி நீர் மேலாண்மை ஆணையம்.

திருச்சி அருகே கல்லணையில் காவிரி நீர் திறப்பு பற்றி நேற்று நேரடி ஆய்வு செய்த ஆணையத்தின் தலைவர் சௌமித்ரா குமார் ஹால் தார் இப்படிக் கூறியிருக்கிறார்.

ஒரு ஆற்றின் தொடக்கப் பகுதியில் ஏதாவது கட்டுமான பணி மேற்கொள்ள வேண்டும் என்றால் அந்த ஆற்றின் கடைமடை பகுதியில் உள்ளவர் களிடம் அனுமதி பெற வேண்டும் என்பது உலகமே பின்பற்றுகிற விஷயம்.

ஆனால் காவிரி விஷயத்தில் கர்நாடகா எந்த அளவுக்கு காலம் காலமாய் விதவிதமான அடாவடி களுடன் நடந்து கொள்கிறது என்பது உலகம் அறிந்த விஷயம் தான்.

சுமார் 30 ஆண்டுகள் சட்டப்போராட்டம் நடத்தி இப்போதுதான் எந்தெந்த மாநிலத்திற்கு எந்தெந்த அளவு தண்ணீர் என்று இறுதித்தீர்ப்பு ஆகி அதுவும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் கர்நாடக மாநிலம் வேண்டுமென்றே மேகதாது திட்டத்தை கொண்டு வருகிறது.மேகதாது திட்டம் என்பது கர்நாடகத்தில் காவிரியின் குறுக்கே மீண்டும் ஒரு அணை கட்டி தண்ணீரை தேக்கி வைத்து குடிநீருக்கும் விவசாயத்துக்கும் பயன்படுத்துவது.
.
அதாவது மேலும் அளவுக்கு அதிகமாக தேக்கி வைத்துக் கொள்வது உபரி வெள்ளம் ஏற்பட்டு அணைகள் நிரம்பினால் உபரி நீர் மட்டுமே திறப்பது.
வறட்சி ஏற்பட்டு விட்டால் பஞ்ச பாட்டு பாடுவது.. இதுதான் கர்நாடகாவின் ஒரே திட்டம். இதற்கு அங்குள்ள மாநில தேசிய கட்சிகள் அனைத்தும் பாகுபாடின்றி ஒரே காலில் நிற்கின்றன.

மேகதாது அணை திட்டம் நிறைவேறினால் எதிர்காலத்தில் தஞ்சை கடைமடை பகுதியே பாலைவனமாக மாறிவிடும் என்பது தமிழகத்தின் அச்சம்.

இதனால்தான் மேகதாது திட்டத்தை கூடவே கூடாது என்று ஆரம்பம் முதலே தமிழகம் கடுமையாக எதிர்த்து வருகிறது அண்மையில் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின்கூட மத்திய அரசுக்கு இது தொடர்பாக கடிதம் எழுதியிருக்கிறார்.

இந்த நிலையில்தான் தமிழகத்துக்கு வந்து கல்லணை பகுதியில் காவிரி நீர்பற்றி ஆய்வு செய்த காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் தலைவர் ஹால்தார் இப்படி துணிச்சலுடன் பேசியிருக்கிறார்.

காவிரி நீர் மேலாண்மை வாரியம் என்பது தன்னாட்சி பெற்றது என்பதும் அது எதனை செய்யவேண்டும் எதனை செய்யக்கூடாது என்று அதற்கு யாரும் உத்தரவிட முடியாது என்றும் அவர் திருவாய் மலர்ந்திருக்கிறார்.

மேகதாது திட்டம் பற்றி விவாதித்த பிறகு தான் ஒரு முடிவுக்கு வரவேண்டும் என்பதும் அவருடைய தெள்ளத்தெளிவாக கருத்தாக உள்ளது.

தமிழக அரசு மேகதாது திட்டமே கூடாது என்கிறது ஆனால் அதை பற்றி விவாதிப்போம் என்கிறது காவிரி நீர் மேலாண்மை ஆணையம்.

காவிரி விஷயத்தில் எப்போதுமே கர்நாடக அரசுடன்தான் மத்திய அரசு கைகோர்க்கும் இப்போது காவிரி நீர் மேலாண்மை வாரியமும் கைகோர்த்த தொடங்கியுள்ளதோ என்று சந்தேகம் பலமாகவே எழுகிறது

_ ஏழுமலை வெங்கடேசன்

More articles

Latest article