டில்லி

முகலாய அரச வம்சத்தவர் எனக் கூறப்படும் யாகுப் ஹபீபுதின் தூசி ராமர் கோவில் கட்ட பிரதமர் மோடியிடம் 1 கிலோ எடையுள்ள தங்க செங்கல்லை நன்கொடையாக அளித்துள்ளார்.

முகலாய மன்னரால் கோவிலை இடித்துக் கட்டப்பட்டதாகக் கூறப்படும்  பாபர் மசூதி நூறாண்டுகளுக்கும் மேலாக அயோத்தியில்  சர்ச்சைகளை சந்தித்து வந்தது.  அந்த மசூதி கரசேவகர்களால் இடித்து தரை மட்டமாக்கப்பட்டது.   ராமர் கோவில்  பிரச்சினையால் பாஜக அபரிமிதமான வெற்றியுடன் ஆட்சியைப் பிடித்தது.   சென்ற வருடம் நடந்த பொதுத் தேர்தலிலும் இதே பிரச்சினை எழுப்பப்பட்டு மீண்டும் பாஜக வென்றது.

கடந்த நவம்பர் மாதம் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பில் மசூதி இருந்த இடத்தில் ராமர் கோவில் கட்ட அனுமதி அளித்தது.  அதற்குப் பதிலாக மசூதியைக் கட்டிக் கொள்ள இஸ்லாமியர்களுக்கு 5 ஏக்கர் நிலம் வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது.   இதற்கான பூமி பூஜை ஆகஸ்ட் மாதம் 5 ஆம் தேதி நடைபெற உள்ளது.  இதில் மோடி உள்ளிட்ட  பலரும் கலந்துக் கொள்ள உள்ளனர்.

ராமர் கோவில் கட்ட மத்திய அரசால் அமைக்கப்பட்ட அமைப்பை சேர்ந்த உடுப்பி பெஷாவர மடாதிபதி விஸ்வபிரசன்ன தீர்த்த சுவாமி யாராக இருப்பினும் எந்த மதத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் ராமர் கோவில் கட்ட நன்கொடை அளிக்கலாம் எனத் தெரிவித்தார்.   நேற்று இந்த தகவல் வெளியானது.

அதையொட்டி முகலாய மன்னர் வம்சத்தின் தற்போதைய வாரிசு என கருதப்படும் யாகுப் ஹபீபுதின் தூசி என்பவர் பிரதமர் மோடியைச் சந்தித்தார்.  அவர் ராமர் கோவில் கட்டுமானத்துக்கு ஒரு கிலோ எடையுள்ள தங்கச் செங்கல் ஒன்றை நன்கொடையாக அளித்துள்ளார்.   கடந்த வருடம் ஹபீபுதீன் தூசி தன்னை பாபர் மசூதி பொறுப்பாளராக நியமிக்குமாறு கேட்டுக் கொண்டிருந்தது நினைவிருக்கலாம்.

ஹபீபுதீன் தூசி,”இந்தியாவில் உள்ள இந்து சகோதரர்களுக்கு எனது உளமார்ந்த வாழ்த்துக்கள்.  நான் ராமர் கோவில் கட்ட பிரதமர் மோடியிடம் 1 கிலோ எடையுள்ள தங்க செங்கல்லை நன்கொடையாக அளித்துள்ளேன். இந்த செங்கல்லை ராமர் கோவில் கட்டுமானத்தில் பயன்படுத்தப் பிரதமர் மோடியிடம் கேட்டுக் கொண்டுள்ளேன்” எனத் தெரிவித்துள்ளார்.

முகலாய மன்னர் பாபரால் இடிக்கப்பட்டதாகக் கூறப்படும் ராமர் கோவில் கட்ட அதே முகலாய வம்சத்தைச் சேர்ந்தவர் தங்கச் செங்கல்லை நன்கொடையாக அளித்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.