மாவேலிக்கா
பாஜக நிர்வாகி கொலை வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதிக்குக் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 19 ஆம் தேதி அன்று கேரள பாஜக மாநில குழு உறுப்பினரான ரஞ்சித் ஸ்ரீநிவாஸ் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். ஒரு மர்ம கும்பல் ரஞ்சித் ஸ்ரீநிவாஸ் வீட்டிற்குள் புகுந்து அவரது மனைவி, தாய் மற்றும் மகள் முன்னிலையில் அவரை வெட்டிக் கொன்றது.
காவல்துறையினர் ரஞ்சித் ஸ்ரீனிவாசை கொலை செய்த 15 பேரைக் கைது செய்தனர். கடந்த 2 ஆண்டுகளாக இந்த வழக்கின் விசாரணை நடைபெற்று வந்த நிலையில் அவர்கள் அனைவருக்கும் மரண தண்டனை வழங்க மாவலிக்கா கூடுதல் அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய மாவேலிக்கா கூடுதல் அமர்வு நீதிபதி விஜி ஸ்ரீதேவிக்கு அடையாளம் தெரியாத நபர் இணையம் மூலம் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். எனவே நீதிபதிக்குக் கேரள காவல்துறையினர் பலத்த பாதுகாப்பு அளித்துள்ளனர்.
தற்போது நீதிபதிக்குக் கொலை மிரட்டல் விடுத்த ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இது தொடர்பாக மேலும் 2 பேர் காவலில் இருப்பதாகவும் அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.