ராஞ்சி

ஹேமந்த் சோரன் ஒரு நாள் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

ஜார்கண்ட் மாநிலத்தில் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா மற்றும் காங்கிரஸ் கட்சியின்  கூட்டணி ஆட்சி நடக்கிறது. அங்கு ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் தலைவர் ஹேமந்த் சோரன் முதல்வராக இருந்தார். இந்நிலையில் இவர் மீது முறைகேடு புகார் எழுந்தது.

அவர் சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டதும் கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். அவருக்கு விசாரணைக்கு அழைப்பு கோரி விடுக்கப்பட்ட 10 சம்மன்களை ஹேமந்த் சோரன் நிராகரித்தார். கடந்த மாதம் 20ம் தேதி ஹேமந்த் சோரனிடம் அமலாக்கத்துறையினர் ராஞ்சியில் வைத்து விசாரணை நடத்தினர்.

அவரிடம்  மேலும் விசாரணை நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு  மீண்டும் சம்மன் அனுப்பப்பட்ட நிலையில் அவர் 30 மணிநேரம் மாயமானார். டில்லியில் உள்ள அவரது வீட்டில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு பி.எம்.டபிள்யூ உள்பட 2 கார், ஆவணங்கள் மற்றும் ரூ.36 லட்சத்தை பறிமுதல் செய்தனர்.

மீண்டும் நேற்று ராஞ்சியில் ஹேமந்த் சோரனிடம் அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தினர். சுமார் 7 மணிநேர விசாரணைக்குப் பிறகு அவர் கைது செய்யப்பட்டார். ஹேமந்த் சோரன் தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநரான தமிழகத்தை சேர்ந்த ராதாகிருஷ்ணனிடம் வழங்கினார்.  தற்போது  புதிய முதல்வராக சம்பாய் சோரன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

அவரை 10 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கோரி அமலாக்கத்துறை மனுத் தாக்கல் செய்திருந்தது. ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனை, நாடாளுமன்ற உறுப்பினர்,, சடடசபை உறுப்பினர்களுக்கான ராஞ்சி சிறப்பு நீதிமன்றம் ஒருநாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டது.

இந்த உத்தரவை அடுத்து ராஞ்சியில் உள்ள பிர்சா முண்டா மத்தியச் சிறைக்கு ஹேமந்த் சோரன் அழைத்து செல்லப்பட்டார்.  நாளை அமலாக்கத்துறை கைதுக்கு எதிரான ஹேமந்த சோரனின் ரிட் மனுவை உச்சநீதிமன்றம் விசாரிக்க உள்ளது