சென்னை
குடியுரிமை சட்டத்துக்கு எதிராகக் கோலம் போட்டு தங்கள் எதிர்ப்பை தெரிவித்த இளைஞர்களைக் கைது செய்ததற்கு திமுக தலைவர் முக ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
குடியுரிமை சட்டத்துக்கு எதிராகச் சென்னையில் போராட்டங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. நேற்று ஆலந்தூரில் இருந்து கிண்டி ஆளுநர் மாளிகை வரை தவ்ஹீத் ஹமாத் சார்பில் கண்டன பேரணி நடந்தது. இந்த பேரணியில் ஆயிரக்கணக்கானோர் கலந்துக் கொண்டிருந்த நிலையில் அவர்களைத் தடுத்து நிறுத்திய காவல்துறையினர் பேரணி நடத்த அனுமதி அளிக்கவில்லை எனக் கூறி கலைந்து செல்ல உத்தரவிட்டனர்.
இதனால் போராட்டக்காரர்கள் தில்லை கங்கா நகர் சுரங்கப்பாதை அருகில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது அங்கு வந்திருந்த ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் சுமார் 600 அடி நீளமுள்ள தேசியக் கொடியைப் பந்தல் போல் தூக்கி வந்தனர். இந்த பேரணியில் கலந்துக் கொண்ட 10000 பேர் மீதும் சட்டவிரோதமாகக் கூடுதல் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் செய்தல் உள்ளிட்ட பிரிவுகளில் காவல்துறையினர் வழக்குப் பதிந்துள்ளனர்.
இன்று காலை சென்னை பெசண்ட் நகர்ப் பகுதியில் இளைஞர்கள் சிலர் குடியுரிமை சட்டத்துக்கு எதிரான வாசகங்களைக் கொண்டு கோலம் போட்டு போராட்டம் செய்தனர், அவர்களை காவல்துறையினர் தடுத்து கைது செய்தனர். இதனால் அந்தப் பகுதியில் கடும் பரபரப்பு உண்டானது. திமுக தலைவர் மு க ஸ்டாலின் கைது நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஸ்டாலின் தனது முகநூல் பக்கத்தில், “அலங்கோல அதிமுக அரசின் அராஜகம் நாளுக்கு நாள் அதிகமாகி வருவதற்கு இது மேலும் ஓர் உதாரணம். சென்னை பெசண்ட் நகரில் குடியுரிமைச் சட்டத் திருத்தத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் கோலம் வரைந்து தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்த ஆறு பேரை எடப்பாடியின் காவல்துறை கைது செய்துள்ளது கண்டிக்கத்தக்கது.
அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளைக் கூட பயன்படுத்தத் தடைவிதிக்கும் தரங்கெட்ட ஆட்சி இது. கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக விடுதலை செய்யவேண்டும். அவர்கள் மீதான வழக்கும் திரும்பப் பெறப்பட வேண்டும். மண்புழு அரசு மனித உரிமைகளை மதிக்க வேண்டும்” எனப் பதிவிட்டுள்ளார்.