சென்னை: சென்னை மாநகரப் போக்குவரத்து கழகம் மடிப்பாக்கம் பகுதியில் பெண்களுக்கான இலவச பேருந்துகளாக, அதிக கட்டணத்தில் இயக்கப்பட்டு வந்த டீலக்ஸ் பேருந்துகளை,  30 இருக்கைகள் கொண்ட இளஞ்சிவப்பு சிற்றுந்துகளாக மாற்றி இயக்கி வருகிறது. இது பெண்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

மெட்ரோ ரயில் பணிகளால், மடிப்பாக்கம் மேடவாக்கம் பகுதிகளில் போக்குவரத்து தடை செய்யப்பட்டு, மாற்றுவழியில் செல்ல வாகன ஓட்டிகளுக்கு அறிவுறுத்தப் பட்டு உள்ளது. அதன்படி,  மடிப்பாக்கம் பிரதான சாலை மற்றும் மேடவாக்கம் பிரதான சாலைகளில் சென்னை மெட்ரோ இரயில் பணிகளை மேற்கொள்ளப்பட்டு வருவதால், அந்த பகுதிகளில் போக்குவரத்து தடை செய்யப்பட்டு, சாலைகள் மூடப்பட்டு உள்ளது. அந்த பகுதியில்  போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.

அதன்படி, கைவேலியில் இருந்து கீழ்கட்டளை நோக்கி செல்லும் மாநகர பேருந்து மற்றும் இதர வாகனங்கள் அனைத்தும் இடது புறம் திரும்பி லேக்வியூ ரோடில் இருந்து வலது புறம் திரும்பி இராஜேந்திரன் நகர் சாலையிலிருந்து மீண்டும் இடது புறம் திரும்பி மேடவாக்கம் பிரதான சாலை வழியாக கீழ்கட்டளை நோக்கி செல்கிறது.

அதுபோல,  மடிப்பாக்கம் இருந்து கீழ்கட்டளை நோக்கி செல்லும் வாகனங்கள் இடது புறம் திரும்பி சபரி சாலை ஆக்ஸிஸ் பேங்க் வழியாக வந்து வலது புறம் திரும்பி லேக்வியூ ரோடில் இருந்து மீண்டும் வலது புறம் திரும்பி இராஜேந்திரன் நகர் சாலையிலிருந்து இடதுபுறம் திரும்பி மேடவாக்கம் பிரதான சாலை வழியாக கீழ்கட்டளை நோக்கி செல்கிறது.

கீழ்கட்டளையிலிருந்து மடிப்பாக்கம் நோக்கி செல்லும் வாகனங்கள் வழக்கம் போல் செல்லலாம் எந்தவித மாற்றமும் இல்லை.  இந்த போக்குவரத்து மாற்றம் காரணமாக கடுமையான வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

இந்தநிலையில், சாலைகள் மூடப்பட்டுள்ளதால் அவதிப்படும் பொதுமக்களின் வசதிக்காக சென்னை மாநகர பேருந்து, மேலும் இளஞ்சிவப்பு நிற பெண்களுக்கான இலவச பேருந்துகளை இயங்கி வருகிறது. புதியதாக பெண்களுக்காலன சிவப்புநிற இலவச பேருந்து இல்லாததால், ஏற்கனவே புழக்கத்தில் உள்ள அதிக டிக்கெட் கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்த டீலக்ஸ் பேருந்துகளை,  சாதாரண இளஞ்சிவப்பு நிறப் பேருந்துகளாக மாற்றி, டிக்கெட் இல்லாமல் பெண்கள் இலவசமாகப் பயணிக்க அனுமதித்துள்ளது.  பொதுவாக டீலக்ஸ் பேருந்துகளில 42 முதல் 50 இருக்கைகள் இருக்கும். ஆனால், அதை  35 இருக்கைகள் கொண்ட சிற்றுந்துங்களாக மாறி மாநகர பேருந்து நிர்வாகம்  இயக்கி வருகிறது.

மெட்ரோ ரயில் பணிக்காக மடிப்பாக்கம்-மேடவாக்கம் சாலையில் சாலை மூடப்பட்டதால், மடிப்பாக்கம் ஏரி மற்றும் நங்கநல்லூர் அருகே குறுகிய திருப்பங்களால் MTC தனது வழக்கமான 50 இருக்கை பேருந்துகளை இயக்க முடியவில்லை. இதனால் பெண்கள் மற்றும் பொதுமக்களின் நலன் கருதி,  அத்தியாவசியமான பொதுப் போக்குவரத்து இணைப்பைப் பராமரிக்க 35 இருக்கைகள் கொண்ட சிறிய பேருந்துகள் இப்போது மாற்று வழித்தடங்களில் பயன்படுத்தப்படுகின்றன.