மும்பை:
மும்பையில் உள்ள கல்ஃப் ஆயில் இந்தியா நிறுவனத்தில் விளம்பர தூதராக இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் டோனி கடந்த 2011ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறார். இந்த ஆண்டு ஐபிஎல் புனே அணியின் தலைமை பொறுப்பை ஏற்றுள்ள டோனில அந்நிறுவனத்தில் ஒரு நாள் சிஇஓ.வாக நியமனம் செய்யப்பட்டார்.
டோனி இன்று மும்பையில் உள்ள அந்நிறுவனத்தில் சிஇஒ நாற்காலியில் உட்கார்ந்திருந்த புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. வழக்கமான கிரிக்கெட் மேல் கோட், டையுடன் கூடிய வெள்ளை சட்டை, ஊதா நிற பேன்டுடன் டோனி இன்று காட்சியளித்தார்.
அலுவலகத்திற்குள் டோனி செல்லும் வரை இந்த தகவல் ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது. டோனி வருகையை பார்த்து ஊழியர்கள் ஆச்சர்யமடைந்தனர். அலுவலக கூட்டங்களில் கலந்து கொண்ட அவர் சில முடிவுகளையும் அறிவித்தார். அவரது நெருங்கிய நண்பரும், வர்த்தக மேலாளருமான அருண் பாண்டே கூறுகையில் இந்த நாளுக்காக நீண்ட நாள் திட்டமிடப்பட்டது என்று தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில், ‘‘ சிஇஒ என்ற முறையில் இன்று அலுவலகத்தில் நடந்த அனைத்து கூட்டங்களிலும் அவர் கலந்துகொண்டார். உண்மையான சிஇஓ போல் பல முடிவுகளை எடுத்து அறிவித்தார். இந்த நிறுவனத்துடன் டோனி பல காலமாக தொடர்பில் உள்ளார். ஒரு நிறுவனத்தின் சிஇஓ எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதை அறிய அவர் ஆவலாக இருந்தார். அதை அவர் இன்று முயற்சி செய்து பார்த்தார்’’ என்றார்.
புனே அணிக்கு டோனி தலைமை ஏற்று நடக்கும் முதல் போட்டியே மும்பை இந்தியன் அணிக்கு எதிராக வரும் 6ம் தேதி நடக்கிறது.